சிங்கப்பூர் பெருவுடன் (ஏப்ரல் 1) கரிம வர்த்தக உடன்பாட்டைச் செய்துகொண்டுள்ளது. அது பல்லுயிர் வளம் நிறைந்த நாடுகளிலிருந்து கரிம ஊக்கப் புள்ளிகளை வாங்க வழியமைக்கும். ஒரு லத்தின் அமெரிக்க நாட்டுடன் சிங்கப்பூர் கரிம வர்த்தக உடன்பாட்டைச் செய்துகொள்வது இது முதன்முறை.
அத்தகைய உடன்பாட்டைச் சிங்கப்பூர் இதற்குமுன் பூட்டான், கானா, பாப்புவா நியூ கினி ஆகிய நாடுகளுடன் செய்துகொண்டுள்ளது.
பாரிஸ் ஒப்பந்தத்தின்படி ஒரு நாடு அதன் உள்நாட்டுப் பருவநிலை இலக்கை எட்ட கரிம ஊக்கப் புள்ளிகளை உற்பத்திசெய்யும் மற்றொரு நாட்டிடமிருந்து அவற்றை வாங்கிக்கொள்ளலாம்.
ஒரு கரிம ஊக்கப் புள்ளி ஒரு டன் கரியமில வாயு சுற்றுச்சூழலிலிருந்து நீக்கப்பட்டதை அல்லது கரிம வெளியேற்றம் தடுக்கப்பட்டதைப் பிரதிபலிக்கிறது. இயற்கை வளங்களை மீட்பது போன்றவை மூலம் கரியமில வாயு சுற்றுச்சூழலிலிருந்து நீக்கப்படுகிறது. காடுகளை அழிக்காமல் பாதுகாப்பது மூலம் கரிம வெளியேற்றம் தடுக்கப்படுகிறது.
இத்தகைய வழிகளில் பெறப்படும் கரிம ஊக்கப் புள்ளிகளைக் கொண்டு சிங்கப்பூர் அதன் பருவநிலை இலக்கை அடைய திட்டமிடுகிறது. அத்தகைய புள்ளிகளை சிங்கப்பூர் இன்னும் வாங்கவில்லை.
இருதரப்பு ஒப்பந்தங்கள் செய்துகொண்ட நாடுகளில் உள்ள கரிமத் திட்டங்களிலிருந்து மட்டும்தான் சிங்கப்பூரால் கரிம ஊக்கப் புள்ளிகளை வாங்க முடியும்.
அந்த வகையில் சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூவும் பெரு சுற்றுப்புற அமைச்சர் யுவன் கார்லோஸ் கஸ்ட்டிரோ வார்கஸும் இணையம் வழி கரிம வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
புதிய உடன்பாட்டின்கீழ், பெருவில் உள்ள கரிமத் திட்டங்கள் நீடித்த நிலைத்தன்மை மேம்பாடுகளை ஊக்குவிக்கும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
2030ஆம் ஆண்டு பருவநிலை மாற்ற இலக்கை அடைய, இயற்கை அடிப்படையிலான கரிம வெளிப்பாட்டை குறைக்கும் முதலீடுகளில் முதல் தொகுப்பை வாங்க, சிங்கப்பூர் மற்றும் பெரு நாடுகளுக்கு இடையே செயல்படுத்தல் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.