சிங்கப்பூரில் இவ்வாண்டு (2026) ஜனவரியில் 11 தட்டம்மைச் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
2024ஆம் ஆண்டு முழுமைக்கும் அதே எண்ணிக்கையிலான சம்பவங்கள் பதிவாயின. அண்மையில் பாதிக்கப்பட்டோரில் மூவர், தட்டம்மைத் தடுப்பூசி போடமுடியாத அளவுக்குப் பச்சிளம் பிள்ளைகள். தட்டம்மை உள்ளூரில் பரவுவதாகவும் கூறப்பட்டது.
சமூகத்திற்குள் தட்டம்மை நோய் பரவுவதைத் தடுக்க, சிங்கப்பூர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
தட்டம்மை நோய் தொற்றியது உறுதிசெய்யப்பட்டால், அத்தகையோரைத் தனிமைப்படுத்துவது அவற்றில் ஒன்று. அவர்களிடமிருந்து வேறு எவருக்கும் நோய் பரவாது என்று தெரியும்வரை, பாதிக்கப்பட்டோர் தனிமைப்படுத்தப்படுவர்.
பாதிக்கப்பட்ட அனைவருடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்படுவர். அவர்களுக்குத் தடுப்பூசி போடப்படும் அல்லது அவர்கள் 21 நாளுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள். தொற்றுநோய்த் தடுப்பு அமைப்பு அந்தத் தகவல்களை வெளியிட்டது.
“சிங்கப்பூரில் மக்களிடையே கூட்டுத் தடுப்பாற்றல் அதிகம். தட்டம்மைத் தொற்றுக்கு எதிரான முக்கியத் தனிப்பட்ட தற்காப்பு அது,” என்று சுகாதார மூத்த துணையமைச்சர் கோ போ கூன், வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங்கும் சமூக ஊடகப் பதிவில் அதுபற்றிக் கருத்துக் கூறியிருந்தார். இங்குள்ள பெரியவர்களில் 99 விழுக்காட்டினருக்குத் தட்டம்மைக்கு எதிரான தடுப்பாற்றல் இருக்கிறது என்று அவர் சொன்னார். அதனால் தட்டம்மை பரவுவது கடினம் என்றார் அவர்.
“நம்முடைய தடுப்பாற்றல் 95 விழுக்காட்டுக்குக் குறைந்தால், ஒட்டுமொத்த நோய் எதிர்ப்புச் சக்தி குறையத் தொடங்கும். அதனால் நம் பிள்ளைகள் எம்எம்ஆர் (தட்டம்மை, மம்ப்ஸ் எனும் பொன்னுக்கு வீங்கி, ரூபெல்லா எனும் ஜெர்மன் தட்டம்மை) தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம்,” என்று திரு ஓங் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
மிக எளிதில் பரவக்கூடிய நோய்களில் தட்டம்மையும் ஒன்று. காற்றில் உள்ள நீர்த்துளிகளின் மூலம் தட்டம்மைக் கிருமி பரவுகிறது. மூக்கு, வாயிலிருந்து வெளியாகும் நீர்த்திவலைகளுடன் நேரடித் தொடர்பில் வந்தாலும் அது தொற்றக்கூடும்.
“நிலைமையை அணுக்கமாகக் கண்காணிக்கிறோம். சமூகம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்,” என்று அமைச்சர் ஓங் சொன்னார்.

