சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட கப்பல் ஒன்று சீனாவில் உள்ள சாங்ஜியாங் ஆற்றில் கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 30) ஜப்பானில் பதிவுசெய்யப்பட்ட கப்பலுடன் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட கப்பலின் பெயர் யாங்சி 22 எனக் கூறப்பட்டது. திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் அந்தக் கப்பல் ஜப்பானில் பதிவுசெய்யப்பட்ட வேகா டிரீம் கப்பலுடன் மோதியதாக சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் டிசம்பர் 31ஆம் தேதி கூறியது.
இரு கப்பல்களிலும் இருந்த யாருக்கும் காயமில்லை என்று ஆணையம் குறிப்பிட்டது.
இரு கப்பல்களுமே தானியங்கள், நிலக்கரி போன்ற உலர்ந்த பொருள்களைக் கொண்டுசெல்ல உதவும் சரக்குக் கப்பல் வகையைச் சேர்ந்தவை.
சம்பவத்தில் கப்பலின் மேற்பகுதி சேதமடைந்ததாக யாங்சி 22 கூறியுள்ளது. மேலும், மோதலையடுத்து ஒன்பது டன் எடையுள்ள எரிபொருள் (எண்ணெய்) நீரில் பரவியதாகவும் அது குறிப்பிட்டது.
தற்போது அந்தக் கப்பல், சேதம் குறித்த மதிப்பீட்டிற்காக ஹெங்ஷா ஈஸ்ட் நங்கூரம் பாய்ச்சுமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆணையம் சொன்னது.
ஷாங்காய் கடல்துறைப் பாதுகாப்பு நிர்வாக அமைப்பும் (MSA) யாங்சி 22 கப்பலின் உரிமையாளரால் பணியமர்த்தப்பட்டுள்ள உதவிப் படகுகளும் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ளன.
“நிலைமை கட்டுக்குள் இருப்பதாக ஷாங்காய் ‘எம்எஸ்ஏ’ அமைப்பு தகவல் அளித்துள்ளது,” என்று ஆணையம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
தேவையான உதவியை வழங்குவதற்காக யாங்சி 22 கப்பலின் நிர்வாக நிறுவனத்துடனும் ஷாங்காய் ‘எம்எஸ்ஏ’ அமைப்புடனும் தொடர்பில் இருப்பதாக அது சொன்னது.
இரு கப்பல்களும் சீரான நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்ட ஆணையம், இந்த மோதல் சம்பவம் குறித்து விசாரிக்கவிருப்பதாகக் கூறியது.