மத்திய கிழக்குப் பூசல் தொடர்வதையடுத்து சிங்கப்பூருக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான ஸ்கூட் விமானச் சேவைகள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, டிஆர்796, டிஆர்797 ஸ்கூட் விமானச் சேவைகள் மே மாதம் 31ஆம் தேதி வரை சிங்கப்பூருக்கும் ஜெட்டாவுக்கும் இடையே சேவை வழங்காது என்று அந்நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) தெரிவித்தது. மத்திய கிழக்கு வட்டாரத்தில் தொடரும், வட்டாரங்களுக்கு இடையிலான அரசியல் பூசல் அதற்குக் காரணம் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டது.
ஸ்கூட், சிங்கப்பூர் ஏர்லைன்சின் மலிவு விலை விமானச் சேவையாகும்.
முன்னதாக ஸ்கூட், ஏப்ரல் 16ஆம் தேதி வரை அச்சேவைகளை ரத்து செய்திருந்தது. ஏப்ரல் 18ஆம் தேதி ஜெட்டாவுக்கு ஸ்கூட் விமானம் ஒன்று செல்லவிருந்தது. ஆனால், மத்திய கிழக்கு வட்டாரத்தில் தொடரும் வட்டாரங்களுக்கு இடையிலான அரசியல் சூழலால் அச்சேவை ரத்து செய்யப்பட்டதாக ஸ்கூட் வெள்ளிக்கிழமை (மே 1) ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தது.
பாதிக்கப்பட்ட பயணிகள் விமான நுழைவுச்சீட்டுகளுக்குத் தாங்கள் செலுத்திய கட்டணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம் அல்லது மற்ற ஸ்கூட் விமானங்களில் பயணம் செய்யப் பதிவுசெய்யலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது.

