வலுவடையும் சிங்கப்பூர்-ஜோர்தான் தற்காப்புத் தொடர்புகள்

2 mins read
24a6d6c9-ce25-4524-b442-db4a7b89d457
தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது (இடது), ஜோர்தானிய கூட்டு ராணுவத் தலைமைத் தளபதிகள் குழுத் தலைவரான மேஜர் ஜெனரல் யூசெஃப் ஹுனெய்த்தியைச் சந்தித்தார். - படம்: ஜோர்தானிய வெளியுறவு விவகார, வெளிநாட்டு ஊழியர் அமைச்சு

ஜோர்தானுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே உள்ள நட்பார்ந்த தற்காப்புத் தொடர்புகளை தற்காப்பு மூத்தத் துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது மறுவுறுதிப்படுத்தியுள்ளார்.

இம்மாதம் 12ஆம் தேதி சிங்கப்பூர், காஸாவுக்கு உதவிப் பொருள்களை ஆகாயம்வழி விநியோகித்தது. அதனைத் தொடர்ந்து வலுவான சிங்கப்பூர்-ஜோர்தான் தற்காப்புத் தொடர்புகளைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜோர்தானிய கூட்டு ராணுவத் தலைமைத் தளபதிகள் குழுத் தலைவரான மேஜர் ஜெனரல் யூசெஃப் ஹுனெய்த்தியை திரு ஸாக்கி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) ஜோர்தானியத் தலைநகர் அம்மானில் சந்தித்தார்.

காஸாவில் உதவிப் பொருள்களை ஆகாயம்வழி விநியோகிக்கும் நடவடிக்கையில் சிங்கப்பூர் ஆகாயப் படைக்கு ஜோர்தான் அழைப்பு விடுத்திருந்தது. அதற்கு நன்றி தெரிவிக்க திரு ஸாக்கி, மேஜர் ஜெனரல் யூசெஃப் ஹுனெய்த்தியைச் சந்தித்தார். மொத்தம் 58 தற்காப்பு, ராணுவப் படையினர் உதவிப் பொருள்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

“காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பிரச்சினையைக் கையாள இருநாட்டு ஆயுதப் படைகளும் எந்த வழிகளில் மேலும் ஒத்துழைக்கலாம் என்பது பற்றியும் இருதரப்பும் கலந்துபேசின,” என்று தற்காப்பு அமைச்சு அறிக்கையில் தெரிவித்தது.

திரு ஸாக்கி, ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) வரை ஜோர்தானுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஜோர்தானிய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றப் பல நாடுகளின் ஆகாயப் படைகள் காஸாவில் உதவிப் பொருள்களை விநியோகிக்கின்றன. அதன் ஓர் அங்கமாக சிங்கப்பூரின் ஆர்எஸ்ஏஎஃப் சி-130 (RSAF C-130) வகை போர் விமானம் இம்மாதம் 12ஆம் தேதி காஸாவில் மருத்துவ, உணவுப் பொருள்களை விநியோகித்தது.

மருத்துவப் பொருள்களை சுகாதார அமைச்சு அனுப்பிவைத்தது. ஹுயிமேனிட்டி மேட்டர்ஸ், கேரிட்டாஸ் ஹியுமேனிட்டேரியன் எயிட், மெர்சி ரிலீஃப் போன்ற அரசாங்க சார்பாற்ற அமைப்புகள் உணவுப் பொருள்களை அனுப்பிவைத்தன.

சிங்கப்பூர் ஆகாயப் படை, முதன்முறையாக சென்ற ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி காஸாவில் அவசர உதவிப் பொருள்களை ஆகாயம்வழி விநியோகித்தது. சிங்கப்பூர், இதுவரை 22 மில்லியன் வெள்ளிக்கும் அதிக மதிப்புள்ள உதவிப் பொருள்களை காஸாவுக்கு வழங்கியிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்