பருவநிலை நடவடிக்கை தொடர்பில் காமன்வெல்த் நாடுகளுடன் பணியாற்ற சிங்கப்பூர் ஆர்வம்: துணைப் பிரதமர் கான்

பருவநிலை நடவடிக்கை தொடர்பில் காமன்வெல்த் நாடுகளுடன் பணியாற்ற சிங்கப்பூர் ஆர்வம்: துணைப் பிரதமர் கான்

படம்: தகவல், மின்னிலக்க மேம்பாடு அமைச்சு

05 Nov 2026 - 5:01 pm

2 mins read

காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்ட முக்கிய விவகாரங்களில் பருவநிலை மாற்றமும் ஒன்று எனச் சிங்கப்பூர் துணைப் பிரதமர் கான் கிம் யோங் வியாழக்கிழமை (நவம்பர் 5) தெரிவித்துள்ளார்.

அதோடு, பொதுவான சவால்களை எதிர்கொள்ள மற்ற உறுப்பு நாடுகளுடன் இருதரப்பு அளவிலோ சிறிய குழுக்களாகவோ இணைந்து பணியாற்ற சிங்கப்பூர் ஆர்வமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

56 உறுப்பு நாடுகளைக் கொண்ட அக்கூட்டமைப்பு, உறுப்பினர்களின் மாறுபட்ட தேசிய நலன்கள் காரணமாக ஒருமித்த கருத்தை எட்டுவதில் சவால்களை எதிர்கொண்டாலும், அணுக்கமான ஒத்துழைப்பை முன்னெடுக்க நாடுகள் அனைத்து விவகாரங்களிலும் உடன்பட வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் சொன்னார்.

அன்டிகுவா, பார்புடாவில் நடைபெற்ற காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களிடம் பேசிய திரு கான், பருவநிலை மாற்றம் குறிப்பாகப் பல கரீபிய, ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பெரும் கவலையளிக்கும் விஷயமாக உருவெடுத்துள்ளது என்று குறிப்பிட்டார்.

அந்தக் கூட்டம் ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அதில், உயர்ந்துவரும் கடல் மட்டம், மோசமான வானிலை ஆகியவற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பல சிறிய தீவு நாடுகள் உள்ளிட்ட காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடுகின்றனர்.

நவம்பர் 1ஆம் தேதிமுதல் நவம்பர் 4ஆம் தேதிவரை நடைபெற்ற அக்கூட்டத்தில், பொருளியல் வளர்ச்சி, வர்த்தகம், அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவினங்கள் ஆகியவை குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டன.

அக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வெவ்வேறு பின்னணிகள், சூழல்கள், தேசிய நலன்களைக் கொண்டுள்ளதால், ஒவ்வொரு விவகாரத்திலும் ஒருமித்த கருத்தை எட்டுவது சிரமம் என்பதைத் திரு கான் ஒப்புக்கொண்டார்.

“ஆனால், சில நாடுகள் முன்னோக்கிச் செல்வதற்கு வகைசெய்ய நாம் எல்லா அம்சங்களிலும் உடன்பட வேண்டிய அவசியமில்லை என்பதை உணர்ந்துள்ளோம் என்று நினைக்கிறேன். காமன்வெல்த் நாடுகளிடையே சிறிய குழுக்களாகவோ இருதரப்பு அளவிலோ ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்