சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள், கடந்த ஜனவரி மாதம் குறைந்ததைத் தொடர்ந்து பிப்ரவரியில் மீண்டு வந்துள்ளது.
ஆண்டு அடிப்படையில் பிப்ரவரியில் எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் 7.6 விழுக்காடு அதிகரித்தன. ஜனவரியில் எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் 2.1 விழுக்காடு குறைந்தன.
என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு திங்கட்கிழமை (மார்ச் 17) வெளிளிட்ட புள்ளி விவங்களில் இத்தகவல்கள் தெரிய வந்தன.
பிப்ரவரியில் எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் 8.3 விழுக்காடு அதிகரிக்கும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய கருத்தாய்வில் பொருளியல் வல்லுநர்கள் கணித்திருந்தனர். இறுதியில் பதிவான விகிதம் அதைவிடக் குறைவாகும்.
சீனப் புத்தாண்டு காலத்தால் முக்கிய ஏற்றுமதிகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய தாக்கத்தைக் கருத்தில்கொண்டு ஜனவரி, பிப்ரவரி இரு மாதங்களுக்குமான ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதமும் கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இவ்விரு மாதங்களில் முக்கிய ஏற்றுமதிகள் 2.3 விழுக்காடு அதிகரித்தன.
பருவத்திற்கேற்ப சரிசெய்யப்பட்ட பின் மாத அடிப்படையில் எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் பிப்ரவரியில் 4.5 விழுக்காடு அதிகரித்தன.
ஆண்டு அடிப்படையில் பிப்ரவரி மாதம் முக்கிய மின்சாரப் பொருள்களின் ஏற்றுமதிகள் 6.9 விழுக்காடு கூடின. ஜனவரியில் இந்த வளர்ச்சி விகிதம் 9.5 விழுக்காடாகப் பதிவானது.
மின்சாரம் சாரா பொருள்களின் ஏற்றுமதிகள் ஆண்டு அடிப்படையில் பிப்ரவரி மாதம் 7.8 விழுக்காடு அதிகரித்தன. ஜனவரியில் ஏற்றுமதிகள் 4.8 விழுக்காடு குறைந்ததைத் தொடர்ந்து பிப்ரவரியில் வளர்ச்சி பதிவானது.
தொடர்புடைய செய்திகள்
காப்பு சொத்தாக வைத்திருக்காத தங்கத்தின் (non-monetary gold) ஏற்றுமதிகளில்தான் ஆக அதிக வளர்ச்சி பதிவானது. இப்பிரிவில் ஏற்றுமதிகள் 106.9 விழுக்காடு அதிகரித்தன.
அமெரிக்கா, தைவான், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அனுப்பப்பட்ட எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் அதிகரித்தன. அதேவேளை, சீனா, ஹாங்காங், இந்தோனீசியா ஆகியவற்றுக்கான எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் குறைந்தன.
குறிப்பாக சீனாவுக்கான எண்ணெய் சாரா ஏற்றுமதிகள் ஆக அதிகமாகக் குறைந்தன. பிப்ரவரி மாதம் அந்நாட்டுக்கான ஏற்றுமதிகள் 27.4 விழுக்காடு சரிந்தன.