தவறாகிப்போன மருத்துவ சோதனை;அசைவற்றுக் கிடக்கும் சிங்கப்பூர் மாது

2 mins read
af246296-4a1f-4f70-8a2c-539da7c5d534
சிங்கப்பூரில் உள்ள உறவினர்களுடன் பேசுவதற்காக கைப்பேசியைத் தனது மனைவி டோங்கிடம் காட்டுகிறார் திரு ஜாங். - படங்கள்: வெண்டி டியோ, ஜாங் ஜோங்-சியோக்

இன்சியான்: தென்கொரியாவில் மருத்துவ சோதனை தவறாகிப் போனதால் சிங்கப்பூர் மாது ஒருவர், அங்க அசைவின்றி கிடக்கிறார்.

இரண்டு ஆண்டுகள் தென்கொரியாவில் வசித்த பிறகு முன்னாள் ஆசிரியரும் சிங்கப்பூரருமான திருவாட்டி டோங் மிங் யான், தனது தென்கொரிய கணவர் ஜாங் ஜோங்-சியோக் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஜூனில் சிங்கப்பூர் திரும்புவதாக இருந்தது.

செயின்ட் கேப்ரியல் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணிக்கு மீண்டும் திரும்ப அவர் ஏற்பாடுகளை செய்திருந்தார். உடமைகளில் பாதி சிங்கப்பூருக்கு அனுப்பியாகிவிட்டது.

ஆனால் அவர்களுடைய எண்ணம் ஈடேறவில்லை.

சிங்கப்பூர் திரும்புவதற்கு முன்பு இன்சியான் மருத்துவமனையில் திருவாட்டி டோங், 35, மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்ள விரும்பினார்.

அவருக்கு, மயக்கத்தில் இரைப்பை உட்புறம் சோதிக்கப்பட்டபோது (Gastroscopy) இதயம் செயலிழந்தது. ஏறக்குறைய இருபது நிமிட போராட்டத்திற்கு பிறகு அவரது இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கியது. ஆனால் அதற்குள் மீள முடியாத அளவுக்கு மூளை பாதிக்கப்பட்டதாக மருத்துவ அறிக்கையைக் கண்ட ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

திருவாட்டி டோங், 350,000 வான் (S4336) செலவில் இரைப்பை சோதனை உள்ளிட்ட பரவலான மருத்துவ சோதனைகளை இன்சியான் மருத்துவமனையில் பதிவு செய்திருந்தார்.

“சிங்கப்பூர் திரும்புவதற்கு முன்பு திருவாட்டி டோங் மிங் யான் மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது என்று நாங்கள் முடிவு செய்தோம்,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய திரு ஜாங் கூறினார்.

நான்கு மாதங்களுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து திருவாட்டி டோங் தாதிமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

கட்டட பொறியாளரான திரு ஜாங், 37, மருத்துவ அலட்சியத்திற்காக மருத்துவமனை மீது இழப்பீடு கோரி வழக்குத் தொடுத்துள்ளார்.

இதற்கு, ஏதாவது ஒரு மருத்துவமனையிலிருந்து சுயேச்சை மருத்துவ மதிப்பீட்டு அறிக்கை தேவைப்படுகிறது. இது, கிடைக்காததால் அவர்கள் சிங்கப்பூர் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இன்சியான் மாவட்ட நீதிமன்றம் செப்டம்பர் 20ஆம் தேதி மூன்று மருத்துவமனைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டிற்கான கோரிக்கைகளை அனுப்பியது. ஆனால் மூன்று மருத்துவமனைகளும் கோரிக்கையை நிராகரித்துவிட்டன.

இந்த நிலையில் நவம்பர் 14 தேதி மற்றொரு கடிதத்தை நான்காவது மருத்துவமனைக்கு நீதிமன்றம் அனுப்பியது.

தற்போது திருவாட்டி டோங் இயந்திரத்தின் உதவியுடன் சுவாசித்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்