மருத்துவமனைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட சுகாதார அமைப்புகளில் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு (ஏஐ), முன்னுரைத்தல் மற்றும் நோய்த்தடுப்பு பராமரிப்பை மேம்படுத்துதல், உள்ளிட்ட பல்வேறு புத்தாக்கங்கள் வாயிலாக சுகாதார பராமரிப்பு உருமாற்றம் காணவுள்ளதாகத் தெரிவித்தார் சுகாதார அமைச்சர் ஓங் யி காங்
சிங்கப்பூர் சுகாதார, உயிர்மருத்துவ மாநாட்டில் அக்டோபர் 10ஆம் தேதி உரையாற்றிய அமைச்சர் ஓங், “சுகாதாரப் பராமரிப்பு ‘ஏஐ’ சார்ந்த மேம்பாடு நிறைந்ததாக இருக்கும்; ஆனால் ‘ஏஐ’ தீர்மானம் செய்யும் ஒன்றாக இருக்காது என்பதை உறுதிசெய்வதே, சிங்கப்பூரின் அடிப்படை அணுகுமுறை,” என்று கூறினார்.
சுகாதாரச் சேவையில் ‘ஏஐ’ தொழில்நுட்பப் பயன்பாட்டைச் செயல்படுத்துவதில் முனைப்புடன் இயங்க வேண்டும் என்று குறிப்பிட்ட அமைச்சர் ஓங், இத்தகைய புத்தாக்கமிக்க முயற்சிகளுக்கு ஆதரவு அளித்திடும் வகையில் சுகாதார அமைச்சு அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுகாதார புத்தாக்க நிதிக்கு (Health Innovation Fund) சுமார் $200 மில்லியன் ஒதுக்கீடு செய்யும் என்று கூறினார்.
‘ஏஐ’ தொழில்நுட்ப உதவியுடன் சுகாதார நிபுணர்கள் மற்றும் நோயாளிகள் இடையேயான உரையாடல்களைத் தொகுத்தல், சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்காக கதிர்ப்படங்களில் ‘ஏஐ’ பயன்பாடு, முன்னுரைத்தல் மற்றும் நோய்த்தடுப்புச் சேவையை வழங்குவதில் ‘ஏஐ’ தொழில்நுட்பம் எனப் பொதுச் சுகாதார நிறுவனங்களின் சுகாதாரச் சேவைகள் புதிய பரிணாமங்களை எட்டவுள்ளன.
இதன் அங்கமாக மருத்துவப் பதிவுகளை ஆவணப்படுத்துதல், புதுப்பித்தலில் ‘ஏஐ’ சாதனப் பயன்பாட்டைப் புகுத்தும் நோக்குடன் பொதுச் சுகாதார அமைப்புகளில் 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் தானியக்கப் பதிவு புதுப்பித்தல் முறை ஆகியவற்றை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகச் சுகாதார அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
சிங்கப்பூரில் நாளொன்றிற்குச் சுமார் 60 பேர் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ஓங், “ஏஐ தொழில்நுட்பம் வழியாக உடல் நிலை, சமூகப் பொருளியல் சூழல், வாழ்வியல்முறை உள்ளிட்ட நோய்க் கணிப்பு மாதிரிகளைப் பெற முடியும்.
“போதிய தரவுகள், நன்கு பயிற்றுவிக்கப்பட்ட மாதிரிகள் இருக்கையில் அவற்றின் மூலம் ஏராளமான நபர்களுக்கு முன்கூட்டியே இத்தகைய பாதிப்புகள் குறித்த முன்னெச்சரிக்கைத் தகவல்கள், சுகாதார நடவடிக்கைகள், மருந்துகள் குறித்த பராமரிப்பை வழங்கலாம். இது பெரிய உருமாற்றம்,” என்றார்.
இத்தகைய கணிப்புகளில் கவனத்துடன் செயலாற்றுவது அவசியம் என்ற அமைச்சர் ஓங், “இல்லாவிடில் அது தேவையற்ற கவலைகளுக்கு வழிவகுத்துவிடும். எனவே, நிதானத்துடன் அதேவேளை விழிப்புடன் நாம் செயல்பட வேண்டும்,” என்றும் கேட்டுக்கொண்டார்.


