சிங்கப்பூரின் ஈ வெய் திடல்தடச் சங்கத்தின் சிங்க நடனக் குழு 15வது உலகச் சிங்க நடன வெற்றியாளர் போட்டியில் விருதை வென்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) நடைபெற்ற போட்டியில் அது விருதைத் தற்காத்தது. ஈராண்டுகளுக்கு ஒரு முறை போட்டி நடைபெறுகிறது. இதற்கு முன்னர் ஈ வெய் 2023ஆம் ஆண்டில் வெற்றிபெற்றது. 13 ஆண்டுகளாக விருதை வைத்திருந்த மலேசியாவின் ஆதிக்கத்தை அந்த வெற்றி முடிவுக்குக் கொண்டுவந்தது. ஈ வெய் இம்முறை இரண்டு குழுக்களைப் போட்டிக்கு அனுப்பியது.
‘பி’ குழு மாபெரும் வெற்றியாளராக வாகை சூடியது. ‘ஏ’ குழு இரண்டாம் இடத்தில் வந்தது.
சங்கத்தின் பயிற்றுவிப்பாளர் லீ காய் மிங் (Lee Kai Ming), 30, “உலக அளவில் அங்கீகரிக்கப்படும் சிங்க நடனப் போட்டி இது. அதனால் போட்டியில் வெற்றி பெறுவது எங்களுக்கு முக்கியமானது. நாங்கள் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கிறோம். எஸ்ஜி60 விரைவில் வருகிறது. சிங்கப்பூருக்காக இந்தப் போட்டியை வெல்வது மகிழ்ச்சியைத் தருகிறது,” என்று சொன்னார்.
மலேசியாவில் உள்ள ரிசோர்ட்ஸ் வோர்ல்டு கென்டிங் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. மூன்று நாள் நீடித்த போட்டியில் சீனா, ஹாங்காங், ஆஸ்திரேலியா முதலியவற்றைச் சேர்ந்த குழுக்கள் பங்கெடுத்தன.
சிங்கப்பூரின் இரு குழுக்களும் இவ்வாண்டு (2025) ஏப்ரலில் பயிற்சிகளைத் தொடங்கின. டெஃபு லேனில் உள்ள வாடகை இடத்தில் அன்றாடம் பயிற்சிகள் நடைபெற்றன.
ஈ வெய் திடல்தடச் சங்கத்தின் வெற்றியாளர் குழுவுக்கு US$18,000 (S$23,000) கிடைத்தது. இரண்டாம் நிலையில் வந்த குழு US$10,000ஐப் பரிசாகப் பெற்றது.