தமிழ் எழுத்தாளர்கள் நால்வருக்குச் சிங்கப்பூர் இலக்கியப் பரிசு

தமிழ் எழுத்தாளர்கள் நால்வருக்குச் சிங்கப்பூர் இலக்கியப் பரிசு

2 mins read
4f8c5984-9ae9-465e-a09c-e233a2c361c0
சிங்கப்பூர் இலக்கியப் பரிசு பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் கனகலதா (இடமிருந்து 2ஆவது), அழகுநிலா (இடமிருந்து 4ஆவது), மதிக்குமார் தாயுமானவன் (வலது), தமிழ்ச்செல்வி ராஜராஜன் (வலமிருந்து 2ஆவது) உள்ளிட்டோருடன் அதிபர் தர்மன் சண்முகரத்னம் (நடுவில்), அவருடைய துணைவியார் ஜேன் இத்தோகி (வலமிருந்து 3ஆவது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

இவ்வாண்டின் சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்கான தமிழ்ப் பிரிவில் எழுத்தாளர்கள் நால்வர் விருது பெற்றனர்.

செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.

புதினப் பிரிவில் எழுத்தாளர் கனகலதா ‘சீனலட்சுமி’ நூலுக்காக விருது பெற்றார். இவ்விருதை அவர் பெற்றது இது இரண்டாவது முறை.

“பெண்ணியல் சார்ந்த ஓர் உணர்வுத்தளத்தை அழுத்தமாக முன்வைக்கின்றன,” என்று ‘சீனலட்சுமி’ நூலில் இடம்பெற்ற சிறுகதைகளை நடுவர்கள் பாராட்டினர்.

கவிதைப் பிரிவில் கவிஞர் மதிக்குமார் தாயுமானவன் ‘யாமக்கோடங்கி’ கவிதைத் தொகுப்பிற்காகவும் புத்தாக்க இலக்கியப் புதினம் அல்லாத படைப்புப் பிரிவில் எழுத்தாளர் அழகுநிலா ‘அப்பன்’ நூலுக்காகவும் விருது பெற்றனர்.

“இந்தக் கவிதைகளின் இறுதிப்பகுதி, தாய் நிலத்தின் அடையாளத்தை, அதனுடைய வேரின் மணத்தை, அதில் மீந்திருக்கும் நினைவின் அடுக்குகளை, அதன் வழியே நிகழ்ந்துகொண்டிருக்கும் பெரும்பண்பாட்டு அம்சங்களைப் பேசுகின்றன,” என்று நடுவர்கள் ‘யாமக்கோடங்கி’ கவிதைத் தொகுப்பைப் பாராட்டினர்.

தமிழ்மொழியின் எழுத்து வடிவம், பேச்சு வடிவம் என இரண்டையும் தேவைக்கேற்ப சித்திரிப்பிலும் உரையாடலிலும் கலந்து எழுதப்பட்ட நூல் என்பதால் உணர்வொன்றி வாசிக்க முடிகிறது என்று அழகுநிலாவின் ‘அப்பன்’ நூல் பற்றி நடுவர்கள் குறிப்பிட்டனர்.

‘யாமக்கோடங்கி’ கவிதைத் தொகுப்பு பத்தாண்டுகளின் உழைப்பு என்றார் கவிஞர் மதிக்குமார் தாயுமானவன்.

“ஒரே மேடையில் நான்கு மொழிகளுக்கான இலக்கிய அங்கீகாரம் வழங்குவது பாராட்டத்தக்கது,” என்றார் அவர்.

இரண்டாவது முறையாக இவ்விருதைப் பெற்ற அழகுநிலா, “இலக்கியத் துறையில் மேன்மேலும் சிறக்க இவ்விருது ஓர் உந்துதல் ஆகும். இது எனக்குத் தொடர்ச்சியான பயணம்,” என்று கூறினார். 

இவ்வாண்டிற்கான சிறந்த அறிமுக நூல் விருது, புதினத்தில் தமிழ்ச்செல்வி இராஜராஜனின் ‘காற்றலையில்’ நூலுக்கு வழங்கப்பட்டது.

சீனம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் சிறந்த அறிமுக நூல் பிரிவில் மூன்று எழுத்தாளர்கள் விருது வென்றனர்.

சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளான ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியிடப்படும் படைப்புகளுக்காக ஈராண்டுகளுக்கு ஒருமுறை இவ்விருது வழங்கப்படுகிறது.

நான்கு மொழிகளில் மொத்தம் 17 பேர் விருது பெற்றனர். சிங்கப்பூர்க் குடிமக்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் நடத்தப்படும் இப்போட்டியில் ஒவ்வொரு வெற்றியாளருக்கும் தலா $3,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்