சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி 4-5% வளர்ச்சி அடையும் என முன்னுரைப்பு

2 mins read
5352f2da-379e-495b-ab07-a0aee51c8a05
2024ஆம் ஆண்டின் பிற்பகுதியில் எண்ணெய் சாரா ஏற்றுமதி வளர்ச்சி மீண்டு வர, மின்னணுவியல் ஏற்றுமதியின் மீட்சி பெரும் அளவில் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி 2024ஆம் ஆண்டில் 4 விழுக்காடு முதல் 5 விழுக்காடு வரை வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது 4 விழுக்காடு முதல் 6 விழுக்காடு வரை வளர்ச்சி அடையும் என முதலில் முன்னுரைக்கப்பட்டிருந்தது.

2024ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் எண்ணெய் சாரா ஏற்றுமதி 6.4 விழுக்காடு சரிவு கண்டதை அடுத்து, முதலில் எதிர்பார்க்கப்பட்டதைவிட சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதி குறைவாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டின் பிற்பகுதியில் எண்ணெய் சாரா ஏற்றுமதி வளர்ச்சி மீண்டு வர, மின்னணுவியல் ஏற்றுமதியின் மீட்சி பெரும் அளவில் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு தெரிவித்தது.

இவ்வாண்டு உலகளாவியப் பொருளியல் 3.2 விழுக்காடு வளர்ச்சி அடையும் என்று அனைத்துலகப் பண நிதியம் முன்னுரைத்திருப்பதை என்டர்பிரைஸ் சிங்கப்பூர் சுட்டியது.

ஓர் ஆண்டுக்கு முன்பு இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் மின்னணுவியல் சாதனங்களுக்கான உள்ளூர் ஏற்றுமதி 3.8 விழுக்காடு அதிகரித்தது.

இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் அது 1.6 விழுக்காடு சரிந்தது.

2024ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மின்னணுவியல் சாராப் பொருள்களின் உள்ளூர் ஏற்றுமதி 9.2 விழுக்காடு வீழ்ச்சி கண்டது.

அதற்கு முந்தைய காலாண்டில் அது 3.8 விழுக்காடு குறைந்தது.

இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் எண்ணெய் வர்த்தகம் 16.9 விழுக்காடு உயர்ந்தது.

முதல் காலாண்டில் அது 3.4 விழுக்காடு குறைந்தது.

இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் எண்ணெய் சாரா வர்த்தகம் 8.5 விழுக்காடு அதிகரித்தது.

முதல் காலாண்டில் அது 5.2 விழுக்காடு ஏற்றம் கண்டது.

2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சிங்கப்பூரின் பொருளியல் 2.9 விழுக்காடு வளர்ச்சி கண்டது.

இதற்கு மொத்த விற்பனை, நிதி மற்றும் காப்புறுதி, தகவல் மற்றும் தொடர்பு ஆகிய துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சி முக்கிய காரணமாக அமைந்தது.

குறிப்புச் சொற்கள்