தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யுனெஸ்கோ மரபுடைமைப் பட்டியலில் ‘சிங்கே ஊர்வலம்’: சிங்கப்பூரும் மலேசியாவும் பரிந்துரை

2 mins read
865dc32b-682c-4e29-9121-c031e3950e47
2016 சிங்கே ஊர்வலத்தில் ‘மாய விளக்கு’ மிதவை. - படம்: மக்‌கள் கழகம்

மலே­சியாவுடன் இணைந்து ‘சிங்கே’ எனப்­படும் பன்முக சமூ­கத்­தி­ன­ரின் கலாசாரத்தையும் மரபுகளையும் வெளிப்படுத்தும் அலங்காரம் மிகுந்த அணிவகுப்பை யுனெஸ்­கோ­வின் தொட்­டு­ணர முடி­யாத கலா­சார மர­பு­டை­மைப் பட்­டி­ய­லுக்கு முன்­மொ­ழி­ய­வுள்­ளது சிங்­கப்­பூர்.

யுனெஸ்கோ தொட்­டு­ணர முடி­யாத கலா­சார மர­பு­டை­மைப் பட்­டி­ய­லுக்கான சிங்கப்பூரின் மூன்றாவது முன்­மொ­ழி­வான இது, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்­தில் சமர்ப்­பிக்­கப்­படும் என எதிர்பார்க்‌கப்படுவதாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) கூறியது தேசிய மரபுடைமைக்‌ கழகம்.

மேலும், இது மலேசியாவுடன் சிங்கப்பூர் இணைந்து சமர்ப்பிக்கும் இரண்டாவது கூட்டு முன்மொழிவு மட்டுமல்லாமல், இம்முயற்சி இரு நாடுகளின் இருதரப்பு உறவுகளின் 60வது ஆண்டு நிறைவையும் 2025ல் நினைவுகூரும் என்றும் அது கூறியது.

சிங்கப்பூரில் மட்டுமல்லாமல், மலேசியாவின் ஜோகூர் பாரு, பினாங் ஆகிய நகரங்களிலும் ஒரு முக்‌கியக் கலாசார நிகழ்வாக கொண்டாடப்படுகிறது சிங்கே ஊர்வலம்.

“சிங்கே இரு நாடுகளின் பகிரப்பட்ட மரபுடைமையைப் பிரதிபலிப்பதோடு, இன்றுவரை இரு நாடுகளிலும் ஆண்டுதோறும் நமது கலாசாரங்களைக் கொண்டாடும் நோக்கில் நடத்தப்பட்டுவருகிறது,” என்றது தேசிய மரபுடைமைக்‌ கழகம்.

1973ல் சீனப் புத்தாண்டைக் கொண்டாட சிங்கப்பூரில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிங்கே ஊர்வலம் காலப்போக்‌கில் பல்வேறு மாற்றங்களைக்‌ கண்டுள்ளது. இன்று, மக்கள் கழகத்தால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் இந்த ஊர்வலம், சிங்கப்பூரின் வளமான, தனித்துவம் வாய்ந்த பல்லின மக்களின் கலாசாரங்களை வெளிப்படுத்தும் முக்‌கிய நிகழ்வாக உருவெடுத்துள்ளது.

புதிய பார்வையாளர்களை ஈர்ப்பதற்கு காலத்திற்கேற்ப நவீன அம்சங்களுடன் மலாய், சீன, இந்­திய, ஐரோப்­பிய பண்­பாட்டுக் கூறுகளை ஒருங்கிணைக்கும் ‘வாழும் மரபான’ சிங்கே ஊர்வலம் சிங்கப்பூரின் பல்­லின கலா­சா­ரத்­தின் அடையாளமாக விளங்­கு­வதாக கூறி­யது தேசிய மரபுடைமைக் கழகம்.

சிங்கே ஊர்வலத்தின் பாரம்பரியத்தைக்‌ கட்­டிக்­காப்­ப­தற்­கான பரிந்­து­ரை­களை அறிந்துகொள்ளவும் இந்த முன்மொழிவுக்கான ஆர்வத்தை பொதுமக்‌கள் மத்தியில் அதிகரிக்கவும் இவ்­வாண்டு ஆகஸ்ட் முதல் அக்­டோ­பர் மாதம் வரை நடத்­தி­யதுபோல் அடுத்த ஆண்­டும் கலந்துரையாடல்களுக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யவுள்ளதாக தேசிய மரபுடைமைக் கழகம் தெரிவித்தது.

இந்த அறிவிப்பு தொடர்பாக நவம்பர் 5ஆம் தேதி நீ சூன் சவுத் சமூக மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமூக நிகழ்ச்சி ஒன்றில், பல்லின சமூக உறுப்பினர்கள் ஒன்றுகூடி மிதவைகளின் வெவ்வேறு பகுதிகளை உருவாக்கியதோடு 2025 சிங்கே ஊர்வலத்திற்கான தங்களின் வாழ்த்துகளையும் எண்ணங்களையும் அஞ்சல் அட்டைகளில் எழுதினார்கள்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங், சிங்கப்பூரின் பன்முகத்தன்மைக்குச் சான்றாக சிங்கே ஊர்வலம் விளங்குவதாகவும் அடுத்த ஆண்டு சிங்கப்பூரின் 60வது தேசிய தினம் என்பதால் வரவிருக்கும் ஊர்வலத்தில் மேலும் பல சிங்கப்பூரர்கள் பங்கேற்று தங்களின் ஆதரவை வழங்குவார்கள் என்று தாம் நம்புவதாகவும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்