தமிழவேள் நற்பணி மன்றத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் ‘சிங்கப்பூர் மணிமகுடம்’ கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஜூலை 12ஆம் தேதியன்று மாலை 6 மணிக்கு தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் அமைந்துள்ள மத்தியப் பொது நூலக ‘புரோகிராமிங்’ அறையில் நடைபெறவுள்ளது.
தமிழறிஞர் டாக்டர் சுப திண்ணப்பன், ஆர் ராஜாராம், இராம. கண்ணபிரான், செ.ப. பன்னீர்செல்வம், முனைவர் மா. இராஜிக்கண்ணு, முனைவர் எச். முஹம்மது சலீம், புதுமைத்தேனீ மா. அன்பழகன், பிச்சினிக்காடு இளங்கோ, எம். இலியாஸ், முனைவர் மீனாட்சி சபாபதி, ஸதக்கத்துல்லாஹ், செ.மனோகரன், கலைவாணி இளங்கோ, இசாக் உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைகள் அடங்கியுள்ள இந்நூலை அனைத்துலக அளவில் விருதுகளை வென்றுள்ள எழுத்தாளரும் சேது வள்ளியம்மாள் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான டாக்டர் சேது குமணன் தொகுத்துள்ளார்.
தேசிய நூலக வாரியத்தின் ஆதரவில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் இரா. தினகரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். தமிழ் முரசு நாளிதழ் ஆசிரியர் த. ராஜசேகர் வாழ்த்துரை வழங்க உள்ளார்.
இந்நிகழ்ச்சிக்கு வளர்தமிழ் இயக்கத் துணைத் தலைவர் ஜோதி மாணிக்கவாசகம், ‘பிளாக் டூலிப்’ மலர்கள் நிறுவனத்தின் தலைவர் முகமது யஹ்யா, மலேசியாவின் சோகா இன்டர்நேஷனல் பள்ளி இயக்குநர் ஆகாச் கே அவுச்சி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். சிங்கப்பூரின் தமிழ்மொழி வளர்ச்சி, தமிழ் எழுத்தாளர்கள், சிங்கப்பூர்த் தமிழ் இதழியல் வரலாறு, சிங்கப்பூர் ஊடகம், சிங்கப்பூர் தமிழர் சமூக நலப் பணிகள் எனப் பல்வேறு சுவாரசியமான தலைப்புகளில் இக்கட்டுரைகள் அமைந்துள்ளன.