சிங்கப்பூர் ஊடகங்கள் நம்பகமான பார்வையாளராகத் திகழவேண்டும்: அதிபர் தர்மன்

சிங்கப்பூர் ஊடகங்கள் நம்பகமான பார்வையாளராகத் திகழவேண்டும்: அதிபர் தர்மன்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

06 Nov 2026 - 2:58 pm

2 mins read

உள்ளூர், வட்டார மற்றும் உலகளாவிய நிகழ்வுகளைத் தெளிவாக விளக்கும் நம்பகமான பார்வையாளராகச் சிங்கப்பூர் ஊடகங்கள் திகழ வேண்டும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.

செய்திகளைச் சேகரிக்கும்போது, உண்மைகளின் அடிப்படையில் முழுமையாகவும், நடுநிலையோடு ஆழமாக ஆராய வேண்டும் என்று அவர் கூறினார்.

வியாழக்கிழமை (நவம்பர் 5) லியான்ஹே சாவ்பாவ் நாளிதழின் ஆங்கிலப் பதிப்பு வெளியீட்டு விழாவில் அதிபர் தர்மன் பங்கேற்றார். அப்போது நடந்த கலந்துரையாடலில் அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

உலக நாடுகள் பிளவுபட்டுள்ள இக்கட்டான நிலையில், நம்பகமான தகவல்களையும் பகுப்பாய்வுகளையும் வழங்கிச் சரியான புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்று அதிபர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் சிறிய நாடாகவும், பல்லினச் சமூகங்களைக் கொண்டதாகவும் இருப்பதால், இந்த இணைப்புப் பணியைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்றார் அவர்.

“அனைத்துலக ஊடகங்கள் சீனா தொடர்பான கருத்தியல், கலாசார வேறுபாடுகளை மட்டுமே பெரிதுபடுத்துகின்றன. வேறுபாடுகளை மட்டும் பார்க்காமல் நாடுகளுக்குள் இருக்கும் பல்வேறு ஒற்றுமைகளையும் மதித்தால் மட்டுமே ஒரு சமூகத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். இது சீனாவுக்கு மட்டுமல்லாமல் இந்தியா, தென்கிழக்காசிய நாடுகளுக்கும் பொருந்தும்,” என்றார் அதிபர் தர்மன்.

“சமூக நல்லிணக்கத்தை உருவாக்குவதில் ஊடகங்களுக்குப் பெரும் பொறுப்பு உள்ளது. அவை வெவ்வேறு சமூகங்களை இணைப்பதோடு, சிங்கப்பூர் அடையாளத்தை மேம்படுத்தவும் உதவ வேண்டும்,” என்றார் அவர்.

“செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மொழிபெயர்ப்பில் உதவினாலும், புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வது மிகவும் அவசியமானது. மூல மொழியின் உண்மையான அர்த்தத்தையும் உணர்வுகளையும் ஒருபோதும் மொழிபெயர்ப்பால் முழுமையாக வெளிப்படுத்த முடியாது,” என்றும் அதிபர் தர்மன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்