கடுமையான மாற்றங்களைக் கண்டுவரும் உலகின் இந்த நிச்சயமற்ற சூழலில், ஒன்றும் செய்யாமல் ஒரு பார்வையாளராக மட்டும் சிங்கப்பூர் இருக்க முடியாது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
மாறாக, தனது எதிர்காலத்தைத் தானே வடிவமைக்கும் வகையில் அது செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அளவில் சிறிய நாடாக இருந்தாலும் உலக ஒழுங்குமுறையைச் சார்ந்தே செழிப்பான நாடாகச் சிங்கப்பூர் இதுவரை வளர்ந்துள்ளது.
“சிங்கப்பூர் 1965ல் இருந்ததைவிட இப்போது சிறந்த வளங்களைப் பெற்றுள்ளது; அதிகத் திறன்களையும் தொடர்புகளையும் கொண்டுள்ளது,” என்று புதன்கிழமை (ஏப்ரல் 16) 14வது எஸ். ராஜரத்னம் விரிவுரையை ஆற்றியபோது பிரதமர் வோங் கூறினார்.
இந்த உரையில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் பதற்றநிலைக்கு மத்தியில் சிங்கப்பூரின் வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகளை அவர் எடுத்துரைத்தார்.
“வரிகள், ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள், தடைகள் போன்ற பொருளியல் கருவிகள், தற்போது தேசிய நலனை முன்னேற்றுவதற்கான அரசியல் கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன,” என்று கூறிய திரு வோங், அதிகரித்துவரும் வர்த்தகப் போரைச் சுட்டிக்காட்டினார்.
இது போன்ற உலகளாவிய மாற்றங்களைச் சமாளிப்பதற்குச் சிங்கப்பூரின் வெளியுறவுக் கொள்கை உத்தியில் மூன்று முக்கியப் பரிமாணங்களைப் பிரதமர் வோங் அறிவித்துள்ளார்.
முதலாவதாக, பருவநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு, எதிர்காலத் தொற்றுநோய்கள் போன்ற முக்கியச் சவால்கள் உட்பட உலகளாவிய ஆட்சிமுறைக்குச் சிங்கப்பூர் தொடர்ந்து பங்களிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சில் ஒரு புதிய மேம்பாட்டுப் பங்காளித்துவப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இது அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஒருங்கிணைத்து, பிற நாடுகளின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும்.
இரண்டாவதாக, ஆசியான் மூலம் சிங்கப்பூர் அக்கம்பக்க நாடுகளுடனான ஒற்றுமையை மேம்படுத்தும். இதில், சுங்க வரி நீக்கம், சுங்க வரி அல்லாத தடைகளைக் குறைத்தல் ஆகியவற்றுடன், ஆசியான் எரிசக்திக் கட்டமைப்பு, மின்னிலக்கப் பொருளியல் கட்டமைப்பு ஒப்பந்தம் போன்ற முயற்சிகளை முன்னெடுப்பதும் அடங்கும்.
“ஆசியான் ஒற்றுமையாகவும் செயலூக்கமுள்ளதாகவும் இருக்குமேயானால், உறுப்பு நாடுகள் சந்திக்கும் புவிசார் அரசியல் பதற்றங்களைச் சமாளிக்க அது உதவ முடியும்,” என்று அவர் கூறினார்.
இறுதியாக, சிங்கப்பூர் அதன் உலகளாவிய ஒத்துழைப்புக் கட்டமைப்பை, குறிப்பாக வளர்ந்துவரும் நாடுகளுடனான ஒத்துழைப்பை ஆழப்படுத்தும்.
அடுத்த சில ஆண்டுகளில் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா போன்றவற்றில் தூதரகங்களை அமைக்கும் என்று பிரதமர் வோங் அறிவித்துள்ளார். அதே வேளையில், வளைகுடா நாடுகளுடனும் பிற மத்திய கிழக்கு நாடுகளுடனுமான தொடர்புகள் அதிகரிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
“இப்பகுதிகள் ஆற்றல் நிறைந்தவை. ஆனால், தொலைவு அல்லது பரிச்சயமின்மை காரணமாக நாம் அவற்றுடன் இதுவரை முழுமையாகத் தொடர்பில் இருந்ததில்லை,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் தொடர்ந்து பாதுகாப்பான துறைமுகமாகவும், உலகளாவிய வர்த்தக மையமாகவும், அனைத்துத் தரப்பினருக்கும் நம்பிக்கைக்குரிய நாடாகவும் இருக்கும் என்று பிரதமர் சொன்னார்.
“அவ்வாறு செய்வதன்மூலம், நமது மக்கள் நல்ல வாழ்வாதாரத்தைப் பெறுவதுடன், நமக்கும் உலகிற்கும் மதிப்பு சேர்க்கும் புத்தாக்கப் படைப்புகள், யோசனைகள், பங்களிப்புகள் முதலியவற்றை உருவாக்க முடிவதை உறுதிசெய்யலாம்,” என்று திரு வோங் கூறினார்.

