நிதிக் குற்றங்களைத் தடுக்கும் வழிகளை வலுப்படுத்த வேண்டும்: அறிக்கை

நிதிக் குற்றங்களைத் தடுக்கும் வழிகளை வலுப்படுத்த வேண்டும்: அறிக்கை

3 mins read
c2898bf7-81d5-4838-8f96-5f7651b750bc
இணையவழி மோசடிகளே சிங்கப்பூர் எதிர்நோக்கும் மிக முக்கியமான கள்ளப்பணப் பரிவர்த்தனை அச்சுறுத்தலாக விளங்குகின்றன என்று நிதி நடவடிக்கைச் செயற்குழு தெரிவித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கள்ளப்பணப் பரிவர்த்தனை, பயங்கரவாதத்திற்கும் பேரழிவு ஆயுதப் பெருக்கத்திற்குமான நிதியளிப்பு ஆகியவற்றைத் தடுக்கும் வழிகளை மேம்படுத்த வேண்டும் என நிதி நடவடிக்கைச் செயற்குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது. நிதிக் குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூர் அடைந்துள்ள வெற்றிகளைச் சுட்டிக்காட்டிய அதே வேளை, அந்த வேண்டுகோளையும் அறிக்கை முன்வைத்தது.

போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத ஆயுத வியாபாரம், இணையவழி மோசடி, பிற கடுமையான குற்றங்களுடன் தொடர்புடைய சட்டவிரோத நிதியைக் கண்காணித்து அதிகாரிகள் திறம்பட நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்ய இந்த செயற்குழு அனைத்துலகத் தரநிலைகளை அமைக்கிறது.

1992ல் இக்குழுவில் இணைந்த சிங்கப்பூர், மதிப்பீட்டுச் செயல்முறைக்கு உட்படும் முதல் சில நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இது சிங்கப்பூருக்கான செயற்குழுவின் பரஸ்பர மதிப்பீடுகளின் ஐந்தாவது சுற்றாகும்.

நாட்டின் அடிப்படையான வலுவான கட்டமைப்பைக் காட்டும் விதத்தில், இந்த உலகளாவிய கண்காணிப்பு அமைப்பின் 2026ஆம் ஆண்டிற்கான பரஸ்பர மதிப்பீட்டு அறிக்கை, சிங்கப்பூரை ‘வழக்கமான கண்காணிப்பு’ பிரிவில் வகைப்படுத்தியுள்ளது. குறிப்பாக, சிங்கப்பூரின் கொள்கை, செயல்பாட்டு ரீதியிலான ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் உலகிலேயே மிகச் சிறந்தவையாக இருக்கலாம் எனச் செயற்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த வலுவான ஒத்துழைப்பின் ஆதரவுடன், சிங்கப்பூர் நாணய ஆணையமும் முக்கிய வர்த்தக வங்கிகளும் இணைந்து ‘காஸ்மிக்’ எனும் புதிய தரவுப் பகிர்வுத் தளத்தைத் தொடங்கின. முதல் ஆண்டில் 1,150க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான கணக்குகள் வெற்றிகரமாக மூடப்பட்டன.

இத்தகைய ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் இன்னும் துல்லியமான அணுகுமுறைகள் தேவை எனச் செயற்குழு அடையாளம் கண்டுள்ளது.

தற்போது, நாடு எதிர்நோக்கும் மிக முக்கியமான கள்ளப்பணப் பரிவர்த்தனை அச்சுறுத்தலாக இணையவழி மோசடி இருக்கிறது. 2020ஆம் ஆண்டு முதல் 2025 வரையிலான காலத்தில் சிங்கப்பூர்க் காவல்துறை 11,000க்கும் மேற்பட்ட கள்ளப்பணப் பரிவர்த்தனை விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

இருப்பினும் அவை பெரும்பாலும் மற்றவர்களுக்காகக் கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்ற முனைவோர்மீது குற்றம் சாட்டுவதிலேயே அதிகக் கவனம் செலுத்துகின்றன.

வெளிநாடுகளிலிருந்து அத்தகைய குற்றங்களைச் செய்யும் கும்பல்களைப் பின்தொடரக் கூடுதல் முயற்சிகளும் முறையான ஒத்துழைப்பும் தேவை எனச் செயற்குழு குறிப்பிட்டது. கள்ளப்பணப் பரிவர்த்தனைக்கான தற்போதைய தண்டனைகள் மிகவும் குறைவாக உள்ளன. அதனால் அவை குற்றவாளிகளிடத்தில் போதிய அச்சத்தை ஏற்படுத்தவில்லை என்றும் அறிக்கை எச்சரித்தது.

வர்த்தகத் துறையில் நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மையில் உள்ள இடைவெளிகளையும் அறிக்கை சுட்டிக்காட்டியது. வணிகங்களின் பின்னணியில் செயல்படும் உரிமையாளர்கள் குறித்த தகவல்களின் துல்லியத்தைச் சரிபார்க்கும் வழிமுறைகளைக் கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையம் பலப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது.

பதிவு செய்யப்படாத வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்பான ஆபத்துகளைச் சிறப்பாகக் கையாள வேண்டிய அவசியத்தையும் செயற்குழு வலியுறுத்தியது.

அத்துடன், துறைமுகங்களில் வெளிநாட்டுக் கப்பல் நிறுவனங்கள் அவற்றின் அலுவலகங்களை நிறுவியுள்ளன. அத்தகைய அலுவலகங்களுக்குச் சட்டவிரோத ஆயுதத் திட்டங்களுக்கு நிதியளிப்பது தொடர்பான ஆபத்துகள் குறித்த புரிதல் குறைவாக இருப்பதையும் அறிக்கை சுட்டியது.

உள்துறை அமைச்சு, நிதி அமைச்சு, சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆகியவை மதிப்பீட்டு அறிக்கையை வரவேற்றுள்ளன. சிங்கப்பூரின் நிதிக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், அறிக்கையின் முடிவுகள் ஆராயப்படும் என்றும் பரிந்துரைகளை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பரிசீலிக்கப்படும் என்றும் அவை தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்