அடிப்படை ராணுவச் சேவையின்போது ‘டச் ஹோம்கேர்’ (TOUCH Homecare) முதியோர் பராமரிப்பு நிலையத்தில் தொண்டூழியராகச் சேர்ந்தார் முருகப்பன் வெங்கடேஷ், 22.
உடல்நலச் சவால்கள் காரணமாக முதியவர்கள் அன்றாட நடவடிக்கைகளில் எவ்வாறு சிரமப்படுகிறார்கள் என்பதை நேரில் கண்டார் முருகப்பன்.
“முதியவர்களின் சுகாதாரப் பராமரிப்புக்குப் பங்களித்து அவர்களின் வாழ்க்கைமுறையை மேம்படுத்த இந்த அனுபவம் என்னைத் தூண்டியது,” என்றார் அவர்.
தற்போது நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியல் பயிலும் இந்த மாணவர், அண்மையில் கையாண்ட ஒரு கல்வித் திட்டத்தின்வழி மின்னிலக்கப் பயன்பாட்டில் சுகாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று உணர்ந்தார்.
“நாம் அனைவரும் மின்னிலக்க யுகத்தில் உள்ளோம். சுகாதாரத் துறையில் மின்னிலக்கம்வழி தீர்வுகளைக் காண்பது எதிர்காலம்,” என்று தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டார் முருகப்பன்.
“அதிகரித்துவரும் மூத்த சமுதாயத்தைக் கருத்தில் கொண்டு மேம்பட்ட சுகாதாரப் பராமரிப்பு மூலம் நமது முதியவர்களுக்கு நாம் இன்னும் நிறைய செய்ய முடியும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சுகாதாரத் துறையில் உள்ள தன்னார்வம், கணினி பொறியியலில் பெற்ற திறன்கள் அனைத்தும் முருகப்பனுக்கு சிங்கப்பூர்த் தொழில்துறை உபகாரச் சம்பளத்தைப் பெற்றுத் தந்தன.
இந்த உபகாரச் சம்பளம்வழி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ‘சினாப்ஸ்’ (Synapxe) எனும் தேசிய சுகாதாரப் பராமரிப்புத் தொழில்நுட்ப அமைப்பில் முருகப்பன் சேவையாற்றவுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தொடர்ந்து எதிர்காலத்தில் சுகாதாரத் துறையில் ஒரு பெரிய பங்கு வகிக்க விரும்புவதாகத் தெரிவித்தார் முருகப்பன்.
“தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு பகுதியாக சுகாதாரத் துறையை மின்னிலக்க மையமாக்க நான் ஆர்வமாக உள்ளேன்,” என்று தெரிவித்தார் முருகப்பன்.
முருகப்பன் உட்பட 196 மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) சிங்கப்பூர்த் தொழில்துறை உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது.
சிங்கப்பூரில் 16 முக்கியத் துறைகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 153 நிறுவனங்கள் அந்த மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கின.
சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
“புதிய உலகளாவிய சூழலில் சிங்கப்பூர், சிங்கப்பூரர்கள் வெற்றிபெற நமது துறைகளை வழிநடத்தும் வலுவான உள்ளூர் திறமைகள் தேவைப்படும்,” என்றார் திரு லீ.
வர்த்தக வரிகள் போன்றவற்றால் சிங்கப்பூர் பொருளாதாரம் மற்றும் துறைகள் எதிர்கொள்ளும் கடுமையான சவால்களையும் திரு. லீ குறிப்பிட்டார்.
“சௌகரியமில்லாத சவால்களாக இருந்தாலும் தைரியமாக முன்னோக்கி அவற்றை எதிர்கொள்ளுங்கள்,” என்று தமது தொடக்க உரையில் மாணவர்களுக்கு ஊக்கமூட்டினார் திரு லீ.
14வது ஆண்டாக வழங்கப்படும் அந்த உபகாரச் சம்பளம் இதுவரை அரசாங்கத்திற்கும் உள்ளூர் நிறுவனங்களுக்கும் இடையிலான கூட்டாண்மையில் வழங்கப்படும் ஒரே உபகாரச் சம்பளம் ஆகும்.

