சிங்கப்பூர் தொடர்பில் ஃபேஸ்புக்கில் நடந்துவரும் ஆள்மாறாட்ட மோசடிகளை ‘மெட்டா’ நிறுவனம் உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் எனச் சிங்கப்பூர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
இணையக் குற்றத் தீங்குச் சட்டத்தின்கீழ் இந்த உத்தரவு புதன்கிழமையன்று (செப்டம்பர் 24) பிறப்பிக்கப்பட்டது.
ஃபேஸ்புக்கில் அரசு அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்யும் மோசடி விளம்பரங்கள், கணக்குகள், வணிகத் தளங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து அவற்றை முடக்கத் தேவையான நடவடிக்கைகளை அந்தச் சமூக ஊடகத்தின் தலைமை நிறுவனமான ‘மெட்டா’ மேற்கொள்ள வேண்டும்.
சிங்கப்பூரின் உத்தரவுக்குச் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அந்நிறுவனம் இணங்க வேண்டும். அவ்வாறு அது செய்யத் தவறினால் $1 மில்லியன்வரை அபராதம் விதிக்கப்படலாம் என வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 25) உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
மேலும், மோசடிகள் தொடரும் ஒவ்வொரு நாளுக்கும் $100,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அது தெரிவித்தது.
மோசடி தொடர்பில் இணையத்தில் வெளியான தகவல்களை அரசாங்கம் நீக்குவதற்கு அதிகாரம் வழங்கும் இணையக் குற்றத் தீங்குச் சட்டம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமல்படுத்தப்பட்டது.
அச்சட்டத்தின்கீழ், மோசடிகளைக் கட்டுப்படுத்த காவல்துறையினரால் பிறப்பிக்கப்பட்ட முதல் உத்தரவு இது.
ஃபேஸ்புக் தளத்தைப் பயன்படுத்தி அரசாங்க அதிகாரிகளைப் போன்று ஆள்மாறாட்டம் செய்து மோசடிகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இவ்வாண்டு ஜூன் மாதம்வரை அதிகரித்துள்ளதாக அமைச்சின் அறிக்கை கூறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், அதே காலகட்டத்தில் பேஸ்புக்கில் வெளியான கிட்டத்தட்ட 2,000 மோசடி விளம்பரங்களையும் கணக்குகளையும் காவல்துறை தடுத்து நிறுத்தியதாகவும் அது தெரிவிக்கிறது.
“ஆள்மாறாட்ட மோசடிகளில் ஈடுபட மோசடி பேர்வழிகள் பெரும்பாலும் ஃபேஸ்புக் தளத்தையே பயன்படுத்துகின்றனர். அரசாங்கத்தின்மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிலைநிறுத்தவும் தீங்கிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் இதுபோன்ற மோசடிகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்,” என அமைச்சு சொன்னது.
உலகளவில் ஆள்மாறாட்ட மோசடிகளின் எண்ணிகையைக் குறைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ‘மெட்டா’ நிறுவனம் மேற்கொண்டாலும் சிங்கப்பூரில் மோசடிகள் அதிகமாக இருப்பதால் இந்த உத்தரவு அவசியம் என அமைச்சு விளக்கியது.
சிங்கப்பூரில் மேம்படுத்தப்பட்ட முக அடையாள முறையை ‘மெட்டா’ செயல்படுத்த வேண்டும் என்றும் சிங்கப்பூரிலிருந்து ஃபேஸ்புக் தளத்தைப் பயன்படுத்துவோரின் கருத்துகளை மதிப்பாய்வு செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அமைச்சு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.