சிங்கப்பூருக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ள வலுவான அரசதந்திர உறவுகளின் அடிப்படையில் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் இன்னும் அதிகமாக இருக்கவேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கரிமச் சந்தைகள் போன்ற அம்சங்களில் கூடுதல் ஒத்துழைப்பையும் இருநாட்டு வர்த்தக உறவுகளையும் மேலும் வலுப்படுத்த நல்ல வாய்ப்பு இருப்பதாக டாக்டர் பாலகிருஷ்ணன் சொன்னார்.
“நாம் வர்த்தகத்தையும் முதலீட்டையும் அதிகமாக்க வேண்டும்,” என்றார் அவர்.
வணிகத் துறை உள்பட அனைத்துலக அளவில் நிச்சயமற்ற சூழல் அதிகரித்துவரும் வேளையில், இருநாடுகளும் திறந்த மனத்துடனும் ஒன்றோடு ஒன்று இணைந்தும் ஆக்கபூர்வமான விதத்தில் ஒன்றையொன்று அணுகுவதும் இன்னும் முக்கியமானதாகிறது என்று டாக்டர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
சிங்கப்பூரும் பாகிஸ்தானும் 60 ஆண்டு அரசதந்திர உறவை இவ்வாண்டு அனுசரித்துவரும் நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த செய்தியாளர் கூட்டத்தில் பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான திரு முகமது இஷாக் தாருடன் கலந்துகொண்ட டாக்டர் பாலகிருஷ்ணன் உரையாற்றினார்.
2005ஆம் ஆண்டுக்குப் பிறகு சிங்கப்பூர்த் தலைவர் ஒருவர் பாகிஸ்தானுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறை.
இதற்குமுன் அப்போதிருந்த வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோ, இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற ஆசியக் கூட்டுறவு கலந்துரையாடலில் பங்கேற்றார்.
அதற்குமுன், 2004ஆம் ஆண்டு மேற்கொண்ட அதிகாரபூர்வப் பயணத்தின்போது இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் இருநாட்டு வெளியுறவு அமைச்சுகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்களை முறைப்படுத்துவதற்குமான ஒப்பந்தங்கள் கையெழுத்தானதை அப்போதைய சிங்கப்பூர்ப் பிரதமர் கோ சோக் டோங் பார்வையிட்டார்.
திரு கோவின் வருகை குறித்து செய்தியாளர் கூட்டத்தில் நினைவுகூர்ந்த டாக்டர் பாலகிருஷ்ணன், இருநாடுகளுக்கும் இடையிலான உயர் மட்ட சந்திப்புகள் அவ்வப்போது நடைபெற்றிருந்தாலும் சிங்கப்பூரிலோ பாகிஸ்தானிலோ அவை அடிக்கடி இடம்பெறவில்லை என்றார்.
இந்நிலையில், இருதரப்பு வர்த்தக வளர்ச்சியை இருநாடுகளும் வரவேற்கின்றன என்றும் இந்த வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்வது குறித்து கலந்துரையாடப்பட்டது என்றும் திரு தார் கூறினார்.
“வர்த்தகக் குழுக்களின் பரிமாற்றம், இருநாட்டு வர்த்தகத் தொழிற்சபைகளுக்கு இடையிலான வலுவான பிணைப்பு ஆகியவை மூலம் இருநாட்டு வர்த்தக சமூகங்களை இன்னும் நெருக்கமாகக் கொண்டுவர ஒப்புக்கொண்டோம்,” என்று மேலும் திரு தார் சொன்னார்.
சிங்கப்பூரில் உள்ள தூதரகத்தில் பாகிஸ்தான் வர்த்தக, முதலீட்டு அலுவலகம் ஒன்றைத் திறந்திருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், அது, வர்த்தக உறவுகளை வலுவாக்குவதற்குப் பாகிஸ்தான் கொண்டுள்ள உறுதியின் வெளிப்பாடு என்றார்.
