பிலிப்பீன்ஸ் நாட்டின் சிபு வட்டாரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 30) உலுக்கிய நிலநடுக்கத்தில் மாண்டோருக்காக அந்நாட்டுப் பிரதமர் ஃபெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியருக்குப் பிரதமர் லாரன்ஸ் வோங் தமது இரங்கல் செய்தி அனுப்பியிருக்கிறார்.
நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளும் கடுமையான சேதமும் ஏற்பட்டதை அறிந்து தாம் மிகுந்த வருத்தமடைந்துள்ளதாக வியாழக்கிழமை (அக்டோபர் 2) தேதியிட்ட அக்கடிதத்தில் பிரதமர் வோங் குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் அன்பிற்குரியோரை இழந்து வாடும் குடும்பங்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கத்தின் சார்பில் தமது இரங்கலையும் காயமுற்றவர்கள் விரைந்து குணமடைய தமது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.
அத்துடன், பிலிப்பீன்சில் இப்போது மேற்கொள்ளப்பட்டுவரும் மீட்பு, துயர்துடைப்பு நடவடிக்கைகளில் உதவ, சக ஆசியான் நாடாகவும் நெருங்கிய நட்பு நாடாகவும் சிங்கப்பூர் தயாராக இருப்பதாகத் திரு வோங் கூறியிருக்கிறார்.
ரிக்டர் அளவுகோலில் 6.9 எனப் பதிவான நிலநடுக்கத்தில் 72 பேர் உயிரிழந்துவிட்டனர்; கிட்டத்தட்ட 300 பேர் காயமடைந்தனர்.
இதனிடையே, பிலிப்பீன்சில் நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் தூதரக உதவிகளை வழங்கும் நோக்கில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள, இணையம்வழி பதிவுசெய்துகொண்டுள்ள சிங்கப்பூரர்களைச் சென்றடைந்துள்ளதாகவும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தில் சிங்கப்பூரர்கள் எவரும் காயமுற்றதாக இதுவரையிலும் தகவல் இல்லை என்றும் அது குறிப்பிட்டது.
பிலிப்பீன்சில் இருக்கும் அல்லது அங்குச் செல்லும் சிங்கப்பூரர்கள் https://eregister.mfa.gov.sg என்ற இணையத்தளம் வழியாகப் பதிவுசெய்யுமாறும் விரிவான பயணக் காப்புறுதி வைத்திருக்குமாறும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.