தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் கவிதை விழா

2 mins read
ac03fbae-6a19-440d-9429-5bd82a66597b
சிங்கப்பூர் கவிதை விழாவையொட்டி வெள்ளிக்கிழமை (ஜூலை 18) பீஷான் நூலகத்தில் இடம்பெற்ற ஓவியமும் கவிதையும் நிகழ்வில் கவிதை வாசிக்கும் கி.ஜனார்த்தனன். - படம்: சிங்கப்பூர் கவிதை விழா

சிங்கப்பூரின் நான்கு மொழிக் கவிதைகளைக் கொண்டாடும் சிங்கப்பூர் கவிதை விழா வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) தொடங்குகிறது.

ஜூலை 25, 26, 27 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் மொழிகளில் கவிதை வாசிப்பு, பயிலரங்கு, ஓவியமும் கவிதையும் கண்காட்சி உள்ளிட்ட 18 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

‘நாடு’ என்ற கருப்பொருளில் இடம்பெறும் 11வது தேசிய கவிதை விழாவில் இவ்வாண்டு இரு தமிழ் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வரும் சனிக்கிழமை (ஜூலை 26) மாலை 5.30 முதல் 7.30 வரை கவிதை வாசிப்பும் உரையாடலும் நடைபெறுகிறது. பங்கேற்போர் மூத்த கவிஞர்களின் கவிதைகள் குறித்து தங்கள் பார்வையை முன்வைப்பர். இந்நிகழ்ச்சி விக்டோரியா ஸ்திரீட், தேசிய நூலகத்தின் B1 தளத்தில் உள்ள தி புரோகிராம் ஸுனில் நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) காலை 10 மணி முதல் 11 மணி வரை கவிதைப் பயிலரங்கு, வாசிப்பு இடம்பெறும். இந்நிகழ்ச்சி, தேசிய நூலகத்தின் தி பாசிபலிட்டி அறையில் நடைபெறும். பயிலரங்கு முன்னதாகவே நடக்கும். பங்கேற்பவர்களின் கவிதை வாசிப்பும் உரையாடலும் நிகழ்ச்சி அன்று இடம்பெறும்.

கவிதை விழாவின் தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (ஜூலை 25) தேசிய நூலக வாரியத்தின் தி பாட்டில் (16வது தளம்) நடைபெறுகிறது. மாலை 4.30 முதல் 6.00 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில் சிங்கப்பூர் கவிதைகள் குறித்து முனைவர் குவி லீ சுவி பேருரை ஆற்றுவார். கலாசார, சமூக, இளையர் அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.

சிங்கப்பூர் கவிதை விழாவை ஒட்டி, சிங்கப்பூரில் இலக்கியக் கருத்தரங்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி தேசிய நூலகத்தின் இமேஜினேஷன் அறையில் காலை 10 மணி முதல் இரவு 7.00 மணி வரையில் நடைபெறும்.

சிங்கப்பூர் கவிதை விழாவையொட்டி வெள்ளிக்கிழமை (ஜூலை 18) பீஷான் நூலகத்தில் இடம்பெற்ற ஓவியமும் கவிதையும் இடம்பெற்றது. நிகழ்ச்சியில் ஓவியங்களுக்கு நான்கு மொழிகளிலும் கவிதைகள் வாசிக்கப்பட்டன. கவிதைகளையும் ஓவியங்களையும் பீஷான் நூலகத்தில் இம்மாதம் இறுதிவரையில் காணலாம்.

மேல் விவரங்களை https://www.facebook.com/poetryfestivalsg என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் காணலாம்.

குறிப்புச் சொற்கள்