சிங்கப்பூர், பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிக்கக் கொள்கை அளவில் தயாராக இருக்கிறது. அதற்கு அமைதியை நோக்கிய முன்னேற்றமும் இரு-நாட்டுத் தீர்வும் முக்கியமாகக் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாட்டு மாநாட்டின்போது சிங்கப்பூர்த் தூதர் கெவின் சியோக் வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
காஸாவில் அவதியுறும் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க மருத்துவக் குழுவொன்றை அனுப்புவது குறித்தும் சிங்கப்பூர் பரிசீலிக்கிறது.
நிரந்தரச் சண்டை நிறுத்த உடன்பாடு எட்டப்பட்ட பிறகு, காஸாவின் மறுநிர்மாணத்திற்குச் சிங்கப்பூர் பங்களிக்கவிரும்புகிறது என்று திரு சியோக் கூறினார்.
இரு நாட்டுத் தீர்வின் அடிப்படையில் பாலஸ்தீனர்களுக்குச் சொந்த நாடு இருப்பதற்குச் சிங்கப்பூர் தொடர்ந்து ஆதரவளித்து வந்திருப்பதை அவர் சுட்டினார். ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத் தீர்மானங்களுடன் அது ஒத்துப்போகிறது. நீண்டகாலமாக நிலவும் பூசலுக்கு இதுவே முழுமையான, நேர்மையான, நிலையான தீர்வாக அமையும் என்று சிங்கப்பூர் உறுதியாய் நம்புவதாகவும் அவர் சொன்னார்.