தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் கரிம வெளியீடு 2028ல் உச்சத்தை எட்டும் என மதிப்பீடு

2 mins read
83c10ad6-fe69-4aa4-be92-03c16a512364
2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் கரிம வெளியீடு 62.21 மில்லியன் டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் கரிம வெளியீடு 2028ஆம் ஆண்டில் 64.43 மில்லியன் டன் என்ற அளவிற்கு உச்சத்தை எட்டும் என்றும் பின்னர் அது குறையத் தொடங்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முதலாவது ஈராண்டு வெளிப்படைத்தன்மை அறிக்கை இதனைத் தெரிவித்துள்ளது.

அஸர்பைஜான் தலைநகர் பக்கூவில் திங்கட்கிழமை (நவம்பர் 11) தொடங்கிய ஐநா பருவநிலை மாநாட்டில் (COP29) அவ்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக, புவியை வெப்பமடையச் செய்யும் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் 2025 முதல் 2028க்குள், கிட்டத்தட்ட 65 மில்லியன் டன் என்ற உச்ச அளவை எட்டும் என்றும் பின்னர் 2030ஆம் ஆண்டுவாக்கில் அது 60 மில்லியன் டன்னாகக் குறையும் என்றும் சிங்கப்பூர் தெரிவித்திருந்தது.

உலகப் பருவநிலை ஒப்பந்தமான பாரிஸ் உடன்பாட்டின்படி, 2030ஆம் ஆண்டில் கரிம வெளியீடு 60 மில்லியன் டன்னைத் தாண்டக்கூடாது எனச் சிங்கப்பூருக்கு இலக்கு வகுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் கரிம வெளியீடு 58.59 மில்லியன் டன்னாக இருந்தது. அது 2025ஆம் ஆண்டில் 62.21 மில்லியன் டன்னாக உயரும் என்றும் கரிமப் புள்ளிகளைப் பயன்படுத்தியபின் அது 59.7 மில்லியன் டன்னாகக் குறையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

பாரிஸ் உடன்பாட்டின்கீழ், நாடுகள் தங்கள் பருவநிலை இலக்குகளை எட்ட, அனைத்துலகக் கரிமச் சந்தையின்கீழ் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படலாம்.

அதன்படி, ஒரு டன் பசுமை இல்ல வாயுக்கள் வெளியீடானது ஒரு கரிமப் புள்ளியாகக் கருதப்படுகிறது. சிங்கப்பூர் போன்ற நாடுகள், மற்ற நாடுகளிடமிருந்து கரிமப் புள்ளிகளைப் பெற்று, தங்களது கரிம வெளியீட்டு அளவைக் குறைத்துக் காட்ட முடியும்.

அவ்வகையில், 2028ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் கரிம வெளியீடு 62.51 மில்லியன் டன்னாக இருக்கும் என்றும் கரிமப் புள்ளிகளைப் பயன்படுத்தி, அதனை 61.92 மில்லியனாகக் குறைக்க முடியும் என்றும் ஐநாவில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை கூறுகிறது.

இந்நிலையில், சிங்கப்பூரின் கரிம வெளியீடு உச்ச அளவு தொடர்பில் காலவரையறை வகுத்திருப்பது முக்கியமானது என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பருவநிலை சார்ந்த ஆய்வாளர் மெலிசா லோ தெரிவித்துள்ளார்.

“கரிமத்தை வெளியிடும் துறைகளுக்கு, அதனைக் குறைப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்க அதிகக் கால அவகாசம் இருப்பதை இது காட்டுகிறது,” என்றார் திருவாட்டி மெலிசா.

அதே நேரத்தில், கரிமப் புள்ளிகளைப் பெறுவதற்கான கட்டணத்தை நிறுவனங்கள் செலுத்துமா அல்லது சிங்கப்பூர் அரசாங்கம் செலுத்துமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்