மோசடிச் செயல்களில் ஈடுபடுவதற்காக மேற்கொள்ளப்படும் தொலைபேசி அழைப்பு அல்லது அனுப்பப்படும் குறுந்தகவல்கள் எங்கிருந்து தொடங்குகின்றன என்பதை அறிவதற்கான கட்டமைப்பை உருவாக்க சிங்கப்பூர் பரிந்துரைத்துள்ளது.
நடைமுறைக்கு வந்தால் இதுபோன்ற கட்டமைப்பு ஆசியான் வட்டாரத்தில் செயல்பாட்டுக்கு வருவது முதல்முறையாக இருக்கும். இத்தகைய கட்டமைப்பு, மோசடிகளை அவை தொடங்கும் இடத்திலேயே கையாள தென்கிழக்காசிய நாடுகளுக்கு மேலும் உதவும் என்றார் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ.
மோசடிக்காரர்கள், பல்வேறு கட்டமைப்புகள்வழி போலி தொலைபேசி எண்களுக்குப் பின்னால் ‘ஒளிந்துகொண்டு’ செயல்படுவதுண்டு. அப்படியிருக்கையில் சந்தேகம் தரும் தொலைபேசி அழைப்புகள், பல்வேறு தொலைத்தொடர்புக் கட்டமைப்புகளின்வழி குறுந்தகவல்கள் ஆகியவற்றைப் ‘பின்தொடர்ந்து’ (traceback) மோசடிகள் தொடங்கும் இடங்களை அடையாளம் காண்பது இலக்கு. தொலைபேசி அழைப்புக்கான பதிவுகளைக் கொண்டு இதைச் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நாங்கள் பரிந்துரைத்திருக்கும் இந்த ‘பின்தொடர்வு’ கட்டமைப்புக்கு அனைத்துலக அளவில் ஒத்துழைப்பு தேவை. சிங்கப்பூரில் உள்ள கட்டமைப்புகளுக்கு மட்டும் இது பொருந்தாது என்பதே இதற்குக் காரணம். இது, மற்ற பகுதி சட்டங்களுடன் சம்பந்தப்பட்டது,” என்று திருமதி டியோ விளக்கினார். வியட்னாம் தலைநகர் ஹனோயில் நடந்த ஆறாவது ஆசியான் மின்னிலக்க அமைச்சர்கள் சந்திப்பின் இறுதிக் கட்டத்தில் அளித்த நேர்காணலில் அவர் பேசினார்.
மோசடியில் ஈடுபடும் நோக்கில் இங்கிருந்து தொலைபேசி அழைப்போ, குறுந்தகவலோ தொடங்கினால் அவை குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ள சிங்கப்பூர் தயாராய் இருக்கும் என்று திருமதி டியோ குறிப்பிட்டார். அதேபோல், இவ்வட்டாரத்தில் உள்ள மற்ற நாடுகளும் ஆவலாய் இருக்கும் என்று தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
“எவ்வளவு தூரம் அவ்வாறு ‘பின்தொடர்ந்து’ கண்டறிகிறோமோ அவ்வளவு தூரம் (மோசடி) தொடங்கும் இடத்திலேயே பிரச்சினையைக் கையாளும் வழிமுறைகளை நன்கு அடையாளம் கண்டு ஆராய முடியும்,” என்றார் அமைச்சர் டியோ.
இந்தப் பரிந்துரைக்கு ஆசியான் உறுப்பு நாடுகளின் கருத்துகளை அறிய சிங்கப்பூர், அவற்றைத் தொடர்புகொள்ளும் என்று திருமதி டியோ தெரிவித்தார்.
சிங்கப்பூர் பரிந்துரைத்துள்ள இந்தக் கட்டமைப்பு, ஆசியான் மோசடித் தடுப்புச் சட்டங்கள் மற்றும் ஆகச் சிறந்த வழிமுறைகள் வழிகாட்டியில் (ASEAN Guide on Anti-Scam Policies and Best Practices) இடம்பெறும் பரிந்துரைகளில் ஒன்றாகும்.

