சிங்கப்பூர் ஏழாவது முறையாக காஸாவிற்கு மனிதநேய உதவிப் பொருள்களை அனுப்பவிருப்பதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், பிப்ரவரி 4ஆம் தேதி தெரிவித்துள்ளார்.
ஜோர்தானிய வெளியுறவு அமைச்சர் அய்மான் சஃபாடியுடன் இதன் தொடர்பில் பேசி, உதவிப் பொருள்கள் அனுப்புவதை உறுதிசெய்ததாக டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்தியாவசியப் பொருள்களும் மருத்துவப் பொருள்களும் சிங்கப்பூர் ஆகாயப் படை விமானத்தில் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அடுத்த மாதம் (மார்ச்), இஸ்லாமிய நாட்காட்டியின்படி ரமலான் மாதம் தொடங்கவிருக்கிறது.
புனித ரமலான் மாதத்தின்போது உள்ளூர் அறநிறுவனமான ரஹ்மதான் லில் அலமின் அறக்கட்டளை (RLAF), காஸாவிற்காகப் புதிய நன்கொடைத் திரட்டில் ஈடுபடும் என்றார் அமைச்சர்.
வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆங் வெய் நெங், சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸுல்கர்னின் அப்துல் ரஹிம், மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸ் யாம் ஆகியோரின் கேள்விகளுக்கு டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் பதிலளித்தார்.
காஸாவில் அண்மையில் சண்டை நிறுத்தம் நிலவும் வேளையில் சிங்கப்பூர் எத்தகைய உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அவர்கள் கேட்டனர்.
நிதி, உதவிப் பொருள்களுக்கு அப்பால், பாலஸ்தீனர்களின் திறன் மேம்பாட்டுக்கு உதவுவதன் தொடர்பில் பாலஸ்தீனத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றவும் சிங்கப்பூர் திட்டமிடுவதாக அமைச்சர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான போர் 2023ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கியது முதல் சிங்கப்பூர் இதுவரை மொத்தம் 19 மில்லியன் வெள்ளிக்குமேல் மதிப்புமிக்க மனிதநேய உதவியை வழங்கியுள்ளது.