சிங்கப்பூர் ஐந்தாம் முறையாக உலகின் ஆகச் சிறந்த துறைமுகமாக மகுடம் சூட்டப்பட்டுள்ளது.
ஷாங்காயில் புதன்கிழமை (ஜூன் 24) நடைபெற்ற ‘ஆசிய சரக்கு, தளவாட, விநியோக நடவடிக்கைகள் விருது’ நிகழ்ச்சியில் சிங்கப்பூர் பாராட்டப்பட்டது.
சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் ஜூன் 25ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
சேவைத் தரம், நம்பகத்தன்மை, புத்தாக்கம் முதலிய அம்சங்களில் உன்னத நிலையை எட்டும் முன்னணித் தளவாட, விநியோகச் சேவை வழங்குநர்களை விருதுகள் அங்கீகரிப்பதாக அது குறிப்பிட்டது.
கடந்த ஆண்டிலும் சிங்கப்பூர் விருதுகளை வென்றது. சென்ற ஆண்டில், ஆசியாவிலும் உலக அளவிலும் தலைசிறந்த துறைமுகமாகக் குடியரசு அங்கீகரிக்கப்பட்டது.
“முன்னணி உலகளாவிய துறைமுக நடுவமாகச் சிங்கப்பூரின் நிலையை வலுப்படுத்துவதில் ஒட்டுமொத்தக் கடல்சார் சமூகத்தின் கூட்டு முயற்சிகளை இந்த அங்கீகாரம் பிரதிபலிக்கிறது,” என்று ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆங் வீ கியோங் கூறினார்.
சிங்கப்பூரின்மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்திருப்பதற்காக உலகளாவிய கப்பல் போக்குவரத்து, தளவாடச் சமூகத்தினருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
விநியோக நடவடிக்கைகள் பரிணாம வளர்ச்சி கண்டுவருகின்றன; புதிய சவால்கள் உருவாகின்றன; இந்நிலையில், சிங்கப்பூரை மீள்திறன்மிக்கதாகவும் உலகுடன் தொடர்பில் இருப்பதாகவும் எதிர்காலத்திற்குத் தயாராகவும் வைத்திருப்பது முக்கியம்; அதற்குப் புத்தாக்கம், உள்கட்டமைப்பு ஆகியவற்றோடு திறனாளர்களிடத்திலும் தொடர்ந்து முதலீடு செய்யப்போவதாகத் திரு ஆங் மேலும் சொன்னார்.
இந்த வருடாந்தர விருதுகளுக்கு ‘ஏஷியா கார்கோ நியூஸ்’ எனும் சரக்கு, தளவாடச் செய்தி நிறுவனம் ஏற்பாடு செய்கிறது. இதன் வாசகர்களான அனைத்துலகச் சரக்கு, தளவாட நிறுவனத்தாரும் வாடிக்கையாளர்களும் செலுத்துகின்ற வாக்குகளின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
சிங்கப்பூர்த் துறைமுகம் சென்ற ஆண்டில் பல முக்கிய மைல்கற்களை எட்டியது. இதுவரை இல்லாத அளவுக்கு 44.66 மில்லியன் கப்பல் கொள்கலன்களை அது கையாண்டது.
கப்பல்களின் வருகையும் புதிய உச்சத்தைத் தொட்டது. 2025ல் இங்கு வந்த கப்பல்களின் மொத்த எடை, அதற்கு முந்திய ஆண்டின் 3.11 பில்லியன் டன்னிலிருந்து 3.22 பில்லியன் டன்னுக்கு உயர்ந்தது.

