உலக நாடுகளில் பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான முயற்சிகள் மெதுவடைந்திருந்தாலும் சிங்கப்பூர் தொடர்ந்து பசுமை எரிசக்திக்கான பங்காளித்துவங்களைத் தீவிரப்படுத்திவருகிறது.
ஆசியான் நாடுகளுடன் ஒருங்கிணைந்த மின்சாரக் கட்டமைப்பை உருவாக்குவதில் சிங்கப்பூர் மும்முரம் காட்டிவருகிறது.
கடந்த மாதம் 27ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதி வரை இடம்பெற்ற சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வாரத்தில் சிங்கப்பூரின் குறிக்கோள் புலப்பட்டது.
எரிசக்தி சம்பந்தப்பட்ட கொள்கை ஆய்வாளர்கள், தொழில்துறைத் தலைவர்கள், வல்லுநர்கள் ஆகியோர் சிறந்த பழக்கங்களையும் அனைத்துலக எரிசக்தித் தளம் குறித்த தீர்வுகளைப் பகிர்ந்துகொள்ளவும் சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி கலந்துரையாடல் வகை செய்கிறது.
இம்முறை நடைபெற்ற கலந்துரையாடலின்போது மிகப் பெரிய இலக்குகள் நிர்ணயிக்கப்படவில்லை என்றபோதும் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் எரிசக்தி உருமாற்றத்துக்கான அடுத்த கட்டத்துக்குச் சிங்கப்பூர் தயாராவதை எடுத்துக்காட்டுகிறது.
சிங்கப்பூர் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் தீர்மானத்தில் உறுதியாக இருக்கிறது.
2050ஆம் ஆண்டுக்குள் கரிம வெளியீடு அறவே இல்லாத நாடாக மாற சிங்கப்பூர் இலக்கு கொண்டிருப்பதாக 2022ஆம் ஆண்டு அறிவித்தது.
குறைந்த கரிம வெளியேற்ற மின்சாரத்தை இறக்குமதி செய்வது, சூரியசக்தி போன்ற பசுமை எரிசக்திக்கான வாய்ப்புகளை ஆராய்வது ஆகியவை மூலம் சிங்கப்பூர் அந்த இலக்கை அடைய முற்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஆக அண்மையில் முடிந்த கலந்துரையாடலில் பல உடன்பாடுகள் கையெழுத்தாகின. அவை, ஊழியரணி மேம்பாட்டை வலுப்படுத்தக்கூடிய அறிவுசார் பகிர்வுகள், புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு போன்றவற்றுடன் தொடர்புடையவை.
உதாரணமாக, சிங்கப்பூருக்கும் அமெரிக்க அமைப்புகளுக்கும் இடையே உடன்பாடு கையெழுத்தானது. அதன் மூலம் அணுசக்தியை எவ்வாறு கையாளலாம் என்பது ஆராயப்படும்.
ஆசியான் மின்சாரக் கட்டமைப்பு மூலம் இயற்கை எரிசக்திக்கான பயன்பாட்டை அதிகரிக்க வட்டார நாடுகள் நம்பிக்கை கொண்டுள்ளன.
அத்தகைய கட்டமைப்பு மூலம் எல்லைத் தாண்டிய மின்சார விநியோகம் இடம்பெறும்.

