தூய காற்றுக்குத் திரும்பிய சிங்கப்பூர்; இயல்புநிலையில் பிஎம்2.5

தூய காற்றுக்குத் திரும்பிய சிங்கப்பூர்; இயல்புநிலையில் பிஎம்2.5

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

27 Oct 2026 - 2:32 pm

2 mins read

சிங்கப்பூர் முழுவதும் திங்கட்கிழமை (அக்டோபர் 26) இரவு முதல் காற்றுத் தரம் ஆரோக்கியமான நிலையிலேயே நீடித்து வருகிறது. மணிக்கு ஒருமுறை கணக்கிடப்படும் பிஎம்2.5 நுண்துகள்களின் அளவு இயல்புநிலையிலும் 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு நன்று முதல் மிதமானது வரையிலான அளவிலும் பதிவாகியுள்ளன.

செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) காலை 8 மணி நிலவரப்படி, சிங்கப்பூரின் ஐந்து வட்டாரங்களிலும் ஒரு மணி நேர பிஎம்2.5 அளவு 17 முதல் 28க்குள் பதிவானது.

அதே வேளையில், 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 62 முதல் 71 வரை மிதமான அளவில் பதிவாகியிருந்தது. பிஎம்2.5 நுண்துகள்களின் செறிவு மணிக்கு ஒருமுறை அளவிடப்பட்டு, தற்போதைய காற்றுத் தரத்தை உடனுக்குடன் பிரதிபலிக்கிறது.

இதில் பூஜ்ஜியம் முதல் 55 வரையிலான குறியீட்டு எண்கள் இயல்புநிலையைக் குறிக்கும். 56 முதல் 150 வரையிலான எண்கள் காற்றில் நுண்துகள்களின் செறிவு உயர்ந்துள்ளதைக் காட்டுகின்றன.

அதேபோல், ஆறு முக்கியக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் காரணங்களின் 24 மணி நேரச் சராசரியைக் கணக்கிடும் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு பூஜ்ஜியம் முதல் 100 வரை இருந்தால் காற்றுத் தரம் ‘நன்று முதல் மிதமானது’ எனக் கருதப்படுகிறது.

இந்த அளவு 101 முதல் 200 வரை பதிவானால் அது ‘ஆரோக்கியமற்றது’ என வகைப்படுத்தப்படும்.

நாட்டின் சில பகுதிகளில் 24 மணி நேர காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு அளவு இன்னமும் ஆரோக்கியமற்ற நிலையிலேயே நீடித்தபோதிலும், பெரும்பாலான பகுதிகளில் பிஎம்2.5 அளவுகள் இயல்புநிலைக்குத் திரும்பின.

செவ்வாய்க்கிழமைக்கான முன்னுரைப்பு குறித்து அக்டோபர் 26 மாலை வெளியிட்ட தனது அன்றாடப் புகைமூட்ட ஆலோசனைக் குறிப்பில், அக்டோபர் 27ஆம் தேதியன்று தீவின் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு அளவு 60 முதல் 90 வரையிலான நன்று முதல் மிதமான நிலையிலேயே இருக்கும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு முன்னுரைத்துள்ளது.

காற்று வடகிழக்கு அல்லது தென்கிழக்குத் திசையிலிருந்து வீசக்கூடும் என்பதால், அக்டோபர் 27 அன்று சிங்கப்பூரைப் புகைமூட்டம் பாதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என தேசியச் சுற்றுப்புற அமைப்பு கூறியுள்ளது.

அதோடு சிங்கப்பூரிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் காற்று பல்வேறு திசைகளிலிருந்து வீசக்கூடும் என்றும், சிங்கப்பூரிலும் அதன் அண்டை வட்டாரங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்