சிங்கப்பூர்ப் பொருளியல் 2024ஆம் ஆண்டில் தொடர்ந்து வளர்ச்சி பெற்றுவந்த நிலையில், நிச்சயமற்ற உலகச் சூழலுக்கு மத்தியிலும் சிங்கப்பூரில் நிலையான வருமான வளர்ச்சி பதிவாகியுள்ளது.
புதன்கிழமை (மே 28) காலை நடைபெற்ற மனிதவள அமைச்சின் செய்தியாளர் சந்திப்பில் இத்தகவல் வெளியிடப்பட்டது.
சந்திப்பில் ஊதியம் சார்ந்த நடைமுறைகள் தொடர்பான 2024 ஆண்டறிக்கையுடன் இதர முக்கிய விவரங்களையும் அமைச்சு வெளியிட்டது.
2024ஆம் ஆண்டில் சிங்கப்பூர் வருமான வளர்ச்சி ஒரு பார்வை:
கடந்த ஆண்டு பணவீக்க அடிப்படையில் மதிப்பிடப்படாத ஊதியம் 5.6 விழுக்காடு வளர்ச்சியடைந்தது; இருப்பினும் பணவீக்கம் தணிந்தது.
பணவீக்க அடிப்படையில் மதிப்பிடப்படாத ஊதியம் 3.2 விழுக்காடு உயர்ந்தது.
அனைத்துத் தொழில்துறைகளிலும் 2024ம் ஆண்டில் வருமான வளர்ச்சி பதிவானது. ஆக அதிக அளவாக 8.7% ஊதிய உயர்வை நிர்வாக மற்றும் ஆதரவு சேவைகள் பதிவு செய்திருந்தது.
ஊழியரணிச் சந்தையைப் பொறுத்தவரையில் 80.8 விழுக்காட்டு நிறுவனங்கள் தொடர்ந்து லாபம் ஈட்டின.
மேலும் அதிக அளவிலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு 2024ஆம் ஆண்டில் ஊதிய உயர்வை அளித்தன.
தங்கள் நிறுவனங்களின் சிறந்த செயல்பாட்டை ஆதரிக்கவும், அதன் தொடர்பில் தமது ஊழியர்கள் ஆற்றிய பணிக்கு வெகுமதி அளிக்கும் நோக்கிலும் அந்த வருமான உயர்வை நிறுவனங்கள் வழங்கியதாக அறிக்கை சுட்டியது.
2024ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க இவ்வாண்டு, பணவீக்க அடிப்படையில் மதிப்பிடப்படாத ஊதிய உயர்வு மிதமானதாக இருக்கும் என்று அறிக்கை கூறியது.
மேலும் இதன் தொடர்பில் முதலாம் காலாண்டில் அமைச்சு மேற்கொண்ட ஆய்வின் முடிவில் கணிசமான நிறுவனங்கள் இந்த ஆண்டு தங்கள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அளிக்கமாட்டா என்று தெரியவந்துள்ளது.
இந்த முடிவுகளுக்கு வித்திட்ட காரணங்கள் குறித்து தமிழ் முரசு எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சின் பேச்சாளர், “புவிசார் பதற்றநிலைகள், அமெரிக்காவின் வரிவிதிப்பு உலக வணிகச் சந்தையில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் உள்ளிட்ட காரணங்கள் ஊழியரணியின் வருமான நிலவரத்தில் பிரதிபலிக்கக்கூடும்,” என்றார்.
மேலும் இத்தகைய சூழ்நிலைகளில் போட்டித்தன்மையுடனும், மீள்திறனுடம் திகழ நிறுவனங்கள் அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களையும் முழுவீச்சில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.