அமைதி, நிலைத்தன்மை, நல்லிணக்கம் ஆகியவற்றின் சோலையாக என்றென்றும் சிங்கப்பூரைப் பேண வேண்டும் என்று பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் வலியுறுத்தியுள்ளார்.
பல இனம், சமயங்களைச் சேர்ந்த ஏறக்குறைய ஆயிரம் பேர் திரண்டிருந்த கம்போங் கிளாம் வருடாந்தர நோன்புத் துறப்பு நிகழ்ச்சியில் அவர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
அராப் ஸ்திரீட் அருகே சனிக்கிழமை (மார்ச் 22) மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு வோங், “பல இன மக்கள் ஒன்றிணைந்து நோன்பு துறந்த இந்த நிகழ்ச்சி தனித்துவமானது. இது எப்போதும் போற்றப்பட வேண்டியது,’’ என்று குறிப்பிட்டார்.
கலாசார முக்கியத்துவம் வாய்ந்த வட்டாரங்களின் சிறப்புகளை மேம்படுத்தும் இலக்குடன் செயல்படவுள்ள பணிக்குழு குறித்துக் குறிப்பிட்ட அவர், அவ்வகையில் கம்போங் கிளாம் வட்டாரம் வர்த்தக ரீதியாக மட்டுமல்லாது சிறப்பு வாய்ந்த தனித்துவமிக்க மரபுடைமை வட்டாரமாகவும் விளங்க வேண்டும் என்றார்.
சிங்கப்பூர் தன் 60வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், கடந்த வந்த பாதைகளில் மக்கள் இணைந்து செயல்பட்டதை நினைவுகூர்ந்து, அமைதி, நிலைத்தன்மை, நல்லிணக்கம் திகழும் நாடாகச் சிங்கப்பூர் முன்னேறவேண்டும் என்று பிரதமர் வலிறுத்தினார் .
1,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுள் திருவாட்டி செல்வராணியும், 68, ஒருவர்.
ஜூரோங் வட்டாரத்திலிருந்து வந்திருந்த அவர், “மலாய்ச் சகோதரர்களுடன் இணைந்து நோன்பு துறந்தது நெகிழ்வான அனுபவம். இது நம் சமுதாயத்தின் அடையாளம்,” என்றார்.
இந்த நல்லிணக்க நிகழ்ச்சிக்கு மகளுடன் வந்திருந்தார் திருவாட்டி நித்யா ஸ்ரீ, 38. கம்போங் கிளாம் வருடாந்தர நோன்புத் துறப்பில் பங்கேற்பது இனிமையான அனுபவம் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
இனம், மொழி, சமயம் கடந்து சிங்கப்பூர்வாசிகள் பலர் ஒன்றாகப் பங்கேற்கும் இவ்விழாவின் மாண்பை வருங்காலத் தலைமுறையினர் அறியவேண்டும் என்பதனால் உயர்நிலை மூன்றாம் வகுப்பில் பயிலும் தன் மகளை அழைத்து வந்ததாகச் சொன்னார் நித்யா ஸ்ரீ.
மூன்றாவது முறையாக நடைபெற்ற கம்போங் கிளாம் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான ஜோசஃபின் டியோ, தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ், தேசிய வளர்ச்சித் துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம், ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான திருவாட்டி டெனிஸ் புவா, டாக்டர் வான் ரிஸால் உள்ளிட்டோரும் அடித்தள அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் ஓர் அங்கமாகப் பங்கேற்பாளர்களுக்கு அன்பளிப்புப் பைகளும், பற்றுச்சீட்டுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய ஒன் கம்போங் கிளாம் தலைவர் ஸாக்கி மரூஃப், “அனைவரும் ஒன்றுகூடிய இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் பகிரும் உணவில் மட்டுமல்லாது நாம் உருவாக்கும் ஒற்றுமையிலும் உள்ளது,” என்றார்.

