காஸாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவிகளை இறுதிக்கட்டம்வரை கொண்டு சேர்ப்பதை வலுப்படுத்த வெளிநாட்டு மனிதநேய அமைப்புகளுடனான பங்காளித்துவத்தைச் சிங்கப்பூர் மேலும் வலுப்படுத்துகிறது.
குளிர்காலத்திற்கு முன்னதாகப் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு உணவு, குடிநீர், சுகாதாரம், அத்தியாவசிய மருத்துவப் பொருள்கள் போன்றவற்றை வழங்குவதற்கான புதிய நிதித் திரட்டு உட்பட சிங்கப்பூரர்கள் பங்களிப்பதற்கான கூடுதல் வழிகளும் ஏற்படுத்தப்படும்.
காஸாவில் உள்ள மனிதநேய உதவிகளுக்கு 2023ஆம் ஆண்டுமுதல் சிங்கப்பூர் இதுவரை $25 மில்லியனுக்கும் அதிகமான நிதியை வழங்கியுள்ளதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகமது வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) எகிப்திலிருந்தவாறு செய்தியாளர்களிடம் பேசினார்.
காஸாவுக்குள் ஒவ்வொரு நாளும் குறைந்தது 600 கனரக வாகனங்களில் உதவிப் பொருள்களைக் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படும்படி உடன்பாடு செய்யப்பட்டுள்ளபோதும் ஒவ்வொரு நாளும் 200 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக அரசாங்க சார்பற்ற அமைப்புகள் கூறுவதாக திரு ஸாக்கி சொன்னார்.
அதை முன்னிட்டே சிங்கப்பூர் ‘எஸ்ஜி ஃபோர் ஹுமெனிட்டி’ என்ற கட்டமைப்பை இம்மாதத் தொடக்கத்தில் அறிமுகம் செய்ததை அவர் பகிர்ந்துகொண்டார்.
உள்ளூரில் உள்ள லாப நோக்கமற்ற குழுக்கள், அரசாங்கம், நாட்டின் ஒட்டுமொத்த மனிதநேய நடவடிக்கைகளை வலுப்படுத்தும் குழுக்கள் ஆகியவற்றை அந்தக் கட்டமைப்பு ஒருங்கிணைக்கிறது.
அதில் நான்கு குழுக்கள் ஈடுபட்டுள்ளன. ஹுமேனிட்டி மேட்டர்ஸ், மெர்சி ரிலிஃப், ரஹ்மட்டான் லில் அலமின் அறநிறுவனம், சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை நிதி திரட்டுவதுடன் நிவாரணப் பொருள்களையும் வழங்கிவருகின்றன.
ரஹ்மட்டான் லில் அலமின் அறநிறுவனமும் எகிப்திய செம்பிறைச் சங்கமும் நவம்பர் 12ஆம் தேதி செய்துகொண்ட புதிய உடன்படிக்கை, காஸாவில் உள்ள குடும்பங்களுக்கும் எகிப்தில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கும் நிவாரணப் பொருள்கள் சென்றுசேர்வதை விரிவுபடுத்துகிறது.
பங்காளித்துவத்தை வலுப்படுத்த ரஹ்மட்டான் லில் அலமின் அறநிறுவனம் 2027ஆம் ஆண்டுக்கான காஸா உதவி நிதித் திரட்டை இவ்வாண்டின் இறுதியில் அறிவிக்கும். அதன் மூலம் $1.5 மில்லியன் நிதியைத் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
