உணவில் உள்ள உப்பின் அளவைக் குறைப்பதற்கான உத்தேச நடவடிக்கைகளை சிங்கப்பூர் பரிசீலிப்பதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் புதன்கிழமை தெரிவித்தார்.
சிங்கப்பூரர்கள் அளவுக்கதிக உப்பு உட்கொள்வதாகவும், உயர் இரத்த அழுத்தம் உள்ளோரின் விகிதம் 2010க்கும் பிறகு கிட்டத்தட்ட இருமடங்கு அதிகரித்திருப்பதாகவும் புதன்கிழமை வெளியிடப்பட்ட தேசிய ஆய்வு காட்டுவதைத் தொடர்ந்து அவர் இவ்விவரத்தை வெளியிட்டார்.
மற்ற நாடுகள் உப்பின் அளவை எவ்வாறு குறைத்துள்ளன என்பதை சிங்கப்பூர் ஆராய்ந்ததாக அமைச்சர் தெரிவித்தார். அவற்றுள் ஒன்று சிலி. அந்நாட்டில், பரிந்துரைக்கப்படும் அளவைவிட அதிக உப்பு சேர்க்கப்பட்டுள்ள உணவுப் பொருள்களில் “அதிகளவு சோடியம்” என்ற எச்சரிக்கை முத்திரை இருக்கவேண்டும். பின்லாந்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுப் பொருள்களுக்கு உப்பு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
“இவ்விரு நடவடிக்கைகளும் பலனளித்தன. இவை தொழில்துறை சீரமைப்பைத் தூண்டி, மக்கள் உட்கொள்ளும் உப்பின் அளவைக் குறைத்தன. இந்த எடுத்துக்காட்டுகளிலிருந்து, நமது உள்ளூர் சூழலுக்குப் பொருத்தமானதைப் பரிசீலித்து அமல்படுத்துவோம்,” என்றார் திரு ஓங்.
மேரியட் டேங் பிளாசா ஹோட்டலில் நடைபெற்ற இதய நோய்த் தடுப்பு மாநாட்டில் ‘புரோஜெக்ட் ரீசெட்’ ஆய்வுத் திட்டத்தைத் துவங்கி வைத்து அவர் பேசினார்.
சுகாதார மேம்பாட்டு வாரியம் நடத்திய சந்தை ஆய்வின்படி, 2010க்கும் 2023க்கும் இடையில், உணவுப் பொருள்களில் உள்ள உப்பின் அளவு சராசரியாக 20 விழுக்காடு அதிகரித்துள்ளது.
2010க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலத்தில், ஒரு தட்டு மீ கோரெங்கில் 1,964 மில்லிகிராம் உப்பு இருந்தது. 2023ல், இது 3,854 மில்லிகிராமுக்கு அதிகரித்துள்ளது. எனவே, ஒரு தட்டு மீ கோரெங் சாப்பிட்டாலே ஒரு நாளுக்குப் பரிந்துரைக்கப்படும் 2,000 மில்லிகிராமுக்குமேல் உப்பு உட்கொள்ளப்பட்டுவிடும்.
உணவு, பானக் கடைக்காரர்கள் சோடியம் குறைவாக உள்ள உப்பைப் பயன்படுத்தலாம் அல்லது சோயா சுவைச்சாறு, மீன் சுவைச்சாறு, உப்பு போன்றவற்றைக் குறைவாகச் சேர்க்கலாம் என்றார் திரு ஓங்.
“உப்பைக் குறைத்தால் சுவை குறையும் என்பது ஒருசில உணவு வகைகளுக்கு உண்மையாக இருக்கலாம். ஆனால், பல ஆண்டுகளாக அதிக உப்பான உணவு வகைகளைச் சாப்பிட்டு நமக்குப் பழகிவிட்டதால், உப்பைச் சுவை என்று நினைக்கிறோம். அந்தப் பழக்கத்தை நாம் மாற்ற முயலவேண்டும்,” என்றார் திரு ஓங்.
வழக்கமான உப்புக்குப் பதிலாக சோடியம் குறைவாக உள்ள மாற்று வகை உப்பைப் பயன்படுத்துமாறு விநியோகிப்பாளர்களை ஊக்குவிக்க 2022ல் தொடங்கப்பட்ட உத்தி பற்றியும் அமைச்சர் விளக்கினார்.
மூன்று முக்கிய விநியோகிப்பாளர்கள் சோடியம் குறைவான உப்பை இப்போது விநியோகிப்பதாக அவர் தெரிவித்தார். நாடு முழுவதிலும் உள்ள 350க்கும் மேற்பட்ட உணவங்காடிக் கடைகள், காப்பிக்கடைகள், உணவு நிலையக் கடைகள் ஆகியவையும், கிட்டத்தட்ட 150 உணவு விநியோகிப்பாளர்களும் சோடியம் குறைவாக உள்ள உணவுப் பொருள்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
ஆனால், இந்த முனைப்பால் உப்பின் விலை அதிகரித்திருக்கிறது. சுகாதார மேம்பாட்டு வாரியம் வழங்கும் மானியத்துடன், சோடியம் குறைவான ஒரு கிலோ உப்பின் விலையை பத்து வெள்ளியிலிருந்து சுமார் நான்கு வெள்ளிக்கு விநியோகிப்பாளர்கள் குறைத்துள்ளனர். ஆனால், வழக்கமான உப்பைவிட இது $3 அதிகம்.
ஒரு குடும்பம் ஓராண்டில் சுமார் ஒரு கிலோகிராம் உப்பு பயன்படுத்தினால், கூடுதல் செலவு ஆண்டுக்கு மூன்று வெள்ளிதான். இந்தச் செலவுடன், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை ஏற்படக்கூடிய ஆபத்தைப் பெருமளவு குறைக்கமுடியும் என்பதால், அதிகமானோர் இந்தச் செலவை ஏற்பார்கள் என்று எதிர்பார்ப்பதாகத் திரு ஓங் கூறினார்.