இயற்கைப் பாதுகாப்பு தொடர்பான 20 இலக்குகளை ஐநாவிடம் சமர்ப்பித்தது சிங்கப்பூர்

2 mins read
e068cd35-3922-4d12-a7ff-192088d5938c
2030ஆம் ஆண்டுக்குள் இங்குள்ள சிங்கப்பூர் மாணவர்கள் இயற்கையில் காணப்படும் வனவிலங்குகள் குறித்துக் கூடுதல் விழிப்புணர்வைப் பெற்றிருப்பர் என்று நம்பப்படுகிறது. ஹம்மிங்பேர்டு பறவையைப் போன்றே தோற்றமளிக்கும் தேன்சிட்டு (வலம்) சிங்கப்பூரில் காணப்படும் பறவையினம். - படங்கள்: நோவா ஒயிட்மன்/கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், தேசியப் பூங்காக் கழகம்
multi-img1 of 3

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் மாணவர்கள் இங்கு இயற்கையில் காணப்படும் வனவிலங்குகள் குறித்த கூடுதல் விழிப்புணர்வைப் பெற்றிருப்பர் என்று தேசியப் பூங்காக் கழகம் நம்பிக்கை கொண்டுள்ளது.

அமெரிக்காவில் மட்டுமே காணப்படும் ‘ஹம்மிங் பறவை’க்கு ஈடான தேன்சிட்டு, ‘டூக்கான்’ பறவைக்கு ஈடான ஹார்ன்பில் போன்றவை குறித்துச் சிங்கப்பூர் மாணவர்கள் அதிகம் தெரிந்துவைத்திருப்பர் என்று அது கருதுகிறது.

ஐக்கிய நாட்டு நிறுவனத்திடம் (ஐநா) அக்டோபர் 20ஆம் தேதி சிங்கப்பூர் சமர்ப்பித்துள்ள 20 தேசிய இலக்குகள் அதைச் சாத்தியமாக்கும்.

தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பு வரையிலான பள்ளிப் பாடத்திட்டங்களில் சிங்கப்பூரின் பல்லுயிர்ச் சூழல் குறித்த கல்வி அம்சங்களை இடம்பெறச் செய்வது அந்த இலக்குகளில் அடங்கும்.

கொலம்பியாவில் அக்டோபர் 21ஆம் தேதி முதல் நவம்பர் 1ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் COP16 எனப்படும் ஐநாவின் பல்லுயிரினக் கருத்தரங்கிற்கு முன்னர் சிங்கப்பூர் அதன் இலக்குகளைச் சமர்ப்பித்துள்ளது.

மேற்கூறியதையும் சேர்த்து மொத்தம் ஐந்து தேசிய இலக்குகள் இதற்குமுன் வெளிப்படையாக அறிவிக்கப்படாதவை.

மற்ற நான்கு இலக்குகள்:

* 2030க்குள் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட வட்டார, அனைத்துலக அளவிலான பல்லுயிரினம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஏற்று நடத்துதல் அல்லது இணைந்து ஏற்பாடு செய்தல்.

* ஒவ்வோர் ஆண்டும் சிங்கப்பூர் வழியாக இடம்பெறும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தக விகிதத்தை 0.5 விழுக்காட்டுக்குக் குறைவாகக் கட்டுப்படுத்துதல்.

* பொதுமக்கள் சிங்கப்பூரில் இயற்கையாகக் காணப்படும் 1,000 தாவர வகைகள் குறித்த தகவல்களைப் பெற உதவும் வகையில் தேசியப் பூங்காக் கழகத்தின் தாவர, விலங்குத் தரவுத்தளத்தைப் பராமரித்தல்.

* சிங்கப்பூரின் திட்டமிடல் கட்டமைப்பில் பல்லுயிர்ச் சூழலுக்கான இடவசதியை உள்ளடக்கிய திட்டமிடல் அம்சங்கள் தொடர்ந்து இடம்பெறுவதை உறுதிசெய்தல்.

ஐநாவிடம் சமர்ப்பிக்கப்பட்ட 20 இலக்குகளுக்கும் அப்பால் மேலும் சில இலக்குகளை வரையறுக்கும் பணி இடம்பெறுவதாகக் கழகம் கூறியது.

குறிப்புச் சொற்கள்