காஸா போரை உடனடியாக நிறுத்தவும் அங்கு மனிதாபிமான உதவி வழங்கப்படுவதைத் தடுக்கும் கட்டுப்பாடுகளை அகற்றவும் பல நாடுகள் ஒன்றுபட்டு குரல் கொடுத்துள்ளன.
அந்த நிலைப்பாட்டை சிங்கப்பூர் ஆதரிப்பதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் கூறியுள்ளார்.
“மனித குலத்தின் நலன் கருதி, போர் நிறுத்தப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்,” என்று துணைப் பேராசிரியர் ஃபைஷால் புதன்கிழமை (ஜூலை 23) ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். மேலும், காஸாவுக்கு இடையூறின்றி மனிதாபிமான உதவி சென்றடையவேண்டும் என்பதற்கும் அங்குள்ள மக்கள் அவதிக்குள்ளாவதைக் குறைக்கவும் சிங்கப்பூர் தொடர்ந்து குரல் கொடுத்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“அதேவேளை, எஞ்சிய பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்கவும் நாங்கள் தொடர்ந்து கோரிவருகிறோம். ஒவ்வோர் உயிரும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு நாளும் இந்தப் போர் தொடரும்போது உயிரிழப்பு அதிகரிக்கிறது, அதிக குடும்பங்கள் சிதைந்துபோகின்றன. அதனால் சம்பந்தப்பட்ட தரப்புகள் விரைவில் ஒப்பந்தத்தை எட்டவேண்டும் என்று நான் வேண்டுகிறேன்,” என்றார் பேராசிரியர் ஃபைஷால்.
“இந்த வன்முறை தொடரக்கூடாது. அனைவருக்காகவும் இந்த அவதியை நிறுத்தி அமைதி, தன்மானம் ஆகியவற்றுக்காகப் பாடுபடவேண்டிய நேரம் இது,” என்றும் அவர் விவரித்தார்.
காஸாவில் போரை நிறுத்திக்கொள்ளுமாறு கடந்த திங்கட்கிழமை (ஜூலை 21) பல நாடுகள் ஒன்றுசேர்ந்து அறிக்கை மூலம் இஸ்ரேலைக் கேட்டுக்கொண்டன. அவற்றில் பெரும்பாலானவை ஐரோப்பிய நாடுகளாகும். அதனைத் தொடர்ந்து டாக்டர் ஃபைஷாலின் ஃபேஸ்புக் பதிவு இடம்பெற்றுள்ளது.
மனிதநேயமற்ற முறையில் பாலஸ்தீனர்கள் கொல்லப்படுவதற்கு எதிராகத் தாங்கள் கண்டனம் தெரிவிப்பதாகவும் உதவி, பாலஸ்தீனர்களை மிகவும் மெதுவாகச் சென்றடைவதாகவும் ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்டவற்றைக் கொண்ட நாடுகள் குழுவாகச் சாடின.
காஸாவில் உதவியைப் பெற முயன்ற 800க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுவிட்டதாக நம்பப்படுகிறது. அவர்களில் பெரும்பாலோர், அமெரிக்கா, இஸ்ரேல் ஆதரவில் செயல்படும் காஸா மனிதாபிமான அறநிறுவனத் தளங்களுக்கு அருகே கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அந்த அறநிறுவனம், பெரும்பாலும் ஐக்கிய நாட்டுச் சபை முறையில் உள்ளடங்காது. ஐநா அமைப்பைச் சார்ந்த உதவிக் குழுக்களில் ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள், காஸாவுக்கு அனுப்பப்படும் உதவிப் பொருள்களைக் கொள்ளையடிப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.
திங்கட்கிழமை அறிக்கை வெளியிட்ட நாடுகள், அத்தியாவசிய உதவிப் பொருள்கள் சென்றடைவதை இஸ்ரேல் தடுப்பதாகவும் அனைத்துலக மனிதாபிமான சட்டத்தின்கீழ் தமக்கிருக்கும் கடமையை இஸ்ரேல் நிறைவேற்றவேண்டும் என்றும் எடுத்துரைத்தன. அந்த அறிக்கை, யதார்த்துக்குத் தொடர்பில்லாதது என்றும் அது ஹமாசுக்குத் தவறான கண்ணோட்டத்தைத் தருகிறது என்றும் இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சு பதிலளித்தது.