நாட்கணக்கில் தாமதமான சிங்கப்பூர் - சிட்னி ‘குவான்டாஸ்’ விமானம்

2 mins read
f6307ff4-3757-4b8c-891c-6a776db966d5
பாதிக்கப்பட்ட பயணிகள் ஜூலை 16ஆம் தேதி மாலை சிங்கப்பூரிலிருந்து புறப்படுவர் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் மறுநாள் காலை அவர்கள் சிட்னி சென்றடைவர் என்றும் ‘குவான்டாஸ்’ நிறுவனம் தெரிவித்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரிலிருந்து சிட்னி செல்லும் ‘குவான்டாஸ்’ விமானத்தில் ஏற்பட்ட இயக்குமுறைச் சிக்கலால் அதன் பயணம் சில நாள்களுக்குத் தள்ளிப் போடப்பட்டது.

முன்னதாக, ‘கியூஎஃப்82’ விமானம் ஜூலை 14ஆம் தேதி இரவு 8.45 மணிக்குச் சிங்கப்பூரிலிருந்து சிட்னி புறப்படத் திட்டமிடப்பட்டிருந்ததாக ஆஸ்திரேலிய நாளிதழான ‘த பிரிஸ்பேன் டைம்ஸ்’ தெரிவித்தது.

ஆனால், நள்ளிரவு வாக்கில் விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

பின்னிரவு 2.30 மணியளவில், அந்த விமானம் சேவை வழங்காது என்றும் பயணிகள் ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பயணிகளுக்குத் தங்குமிடத்துடன் உணவுக்கான தொகையை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

பின்னர், ஜூலை 16ஆம் தேதி காலை விமானம் புறப்படும் என்று கூறப்பட்ட நிலையில் பொறியாளர்கள் தொடர்ந்து அந்த விமானத்தைச் சரிசெய்யும் பணியில் ஈடுபடுவதாகவும் மாற்று விமானம் மூலம் பயணிகள் சிட்னிக்கு அனுப்பப்படுவர் என்றும் கூறப்பட்டது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்குப் பதிலளித்த ‘குவான்டாஸ்’ நிறுவனம், அந்தப் பயணிகள் ஜூலை 16ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து புறப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியது.

ஆஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்ட மாற்று விமானம் மூலம் அவர்கள் ஜூலை 17ஆம் தேதி காலை சிட்னி சென்றடைவர் என்று விமான நிறுவனப் பேச்சாளர் கூறினார்.

பயணிகளுக்கு நேர்ந்த சிரமங்களுக்கு நிறுவனம் மன்னிப்பு கோருவதாக அவர் குறிப்பிட்டார்.

சாங்கி விமான நிலைய இணையத்தளத்தில் ‘கியூஎஃப்82’ விமானம் ஜூலை 16ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு, முதல் முனையத்திலிருந்து புறப்படும் என்ற தகவல் இடம்பெற்றுள்ளது.

‘கியூஎஃப்2’ எனும் விமானம் முன்னர் திட்டமிட்டபடி ஜூலை 16ஆம் தேதி இரவு 7.30 மணிக்குப் புறப்படுவதற்குப் பதில் ஜூலை 17ஆம் தேதி காலை 11.20க்குப் புறப்படும் என்று கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்