வானியல், வானியற்பியலுக்கான (astronomy and astrophysics) அனைத்துலக ஒலிம்பியாட் போட்டியில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் நான்கு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலத்தையும் வென்றுள்ளனர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் சிங்கப்பூரின் மிகச் சிறந்த சாதனையாக இது பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மும்பையில் ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெற்ற வானியல், வானியற்பியல் குறித்த வருடாந்திர அனைத்துலக ஒலிம்பியாட் போட்டியில் 60க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஏறக்குறைய 300 மாணவர்கள் பங்கேற்றனர்.
சிங்கப்பூர் அணியில் ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தைச் சேர்ந்த டீயோ காய் வென், 17, லான் ஷுஹெங் ஜெர்ரி,15, என்யுஎஸ் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த எங் செங் லே, 18, ருஹான் தஸ்னீம் ஷாஃபா, 17, வாங் ஜுன் மின், 15 ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
காய் வென், ஜெர்ரி, செங் லே, ஜுன் மின் ஆகியோர் தலா ஒரு தங்கப் பதக்கத்தை வென்றனர், ருஹான் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஒலிம்பியாட்டில் 2007ஆம் ஆண்டில் முதன்முதலில் பங்கேற்கத் தொடங்கியதிலிருந்து, சிங்கப்பூரின் சிறந்த செயல்பாடு இது என்று சிங்கப்பூரில் வானியல் கல்வியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட உள்ளூர் லாபநோக்கமற்ற குழுவான astronomy.sg -இன் தலைவர் திரு ஹுவாங் செஹான் கூறினார்.
போட்டியில் எழுத்து, செயல்முறை சோதனைகள் இடம்பெற்றன. போட்டியாளர்களின் திறன் கணினி அடிப்படையிலான பிரச்சினைகள், கோள் உருவகப்படுத்துதல், தரவுப் பகுப்பாய்வு போன்றவற்றில் சோதிக்கப்பட்டனர்.
மார்ச் மாதம் நடைபெற்ற சிங்கப்பூர் வானியல் ஒலிம்பியாட் போட்டியில் முதல் நிலையில் வந்தவர்கள் அனைத்துலகப் போட்டியில் பங்கேற்கத் தேர்வுபெற்றனர். அப்போட்டியில் 233 கலந்துகொண்டனர்.

