சிங்கப்பூரில் பருவமழை தொடர்வதையடுத்து சனிக்கிழமை (ஜனவரி 11) காலை வெப்பநிலை 21.6 டிகிரி செல்சியசுக்கு சரிந்தது.
முன்னதாக வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 10) வெப்பநிலை 22 டிகிரி செல்சியசுக்குக்குக் குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அட்மிரல்டி வட்டாரத்தில் வெப்பநிலை 22 டிகிரி செல்சியசாகப் பதிவானது.
சனிக்கிழமை காலை 8.51 மணிக்கு நியூட்டன் வட்டாரத்தில் வெப்பநிலை 21.6 டிகிரி செல்சியசாகப் பதிவானது. இது, சென்ற ஆண்டு பதிவான ஆகக் குறைவான 21.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைவிட சற்றே அதிகமாகும்.
கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி பாa லேபாரில் 21.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதென சிங்கப்பூர் வானிலை மையப் புள்ளி விவரங்களில் தெரிகிறது.
வெள்ளிக்கிழமை முதல் வரும் திங்கட்கிழமை (ஜனவரி 13) கனமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் சிங்கப்பூரின் கால்வாய்களிலும் சாய்க்கடைகளிலும் தற்காலிகமாக அளவுக்கதிகமான நீர் சேரக்கூடும் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் கடந்த வியாழக்கிழமையன்று (ஜனவரி 9) எச்சரித்திருந்தது. அதனைத் தொடர்ந்து திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்றும் அது தெரிவித்திருந்தது.
தேசிய சுற்றுப்புற வாரிய தகவல்களின்படி சிங்கப்பூர் வரலாற்றில் ஆகக் குறைவான வெப்பநிலை 1934, 1989ஆம் ஆண்டுகளில் பதிவானது. அவ்விரு ஆண்டுகளிலும் வெப்பநிலை 19.4 டிகிரி செல்சியசாகப் பதிவானது.