போட்டித்தன்மைத் தரவரிசையில் சிங்கப்பூர் மீண்டும் முதலிடம்

போட்டித்தன்மைத் தரவரிசையில் சிங்கப்பூர் மீண்டும் முதலிடம்

2 mins read
b003ae78-928c-4f6f-8ac9-0b84ca5c5071
2020ஆம் ஆண்டிற்குப் பிறகு சிங்கப்பூர் மீண்டும் தரவரிசையின் உச்சநிலையைப் பிடித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

 போட்டித்தன்மைமிக்க பொருளியலைக் கொண்ட நாடுகளுக்கான உலகத் தரவரிசையில் சிங்கப்பூர் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

சுவிட்சர்லாந்தும் டென்மார்க்கும் அடுத்த இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.

சுவிட்சர்லாந்தைத் தளமாகக் கொண்ட அனைத்துலக நிர்வாக மேம்பாட்டு நிலையம் (ஐஎம்டி) வெளியிட்டுள்ள இப்பட்டியலில் மொத்தம் 67 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

மனப்பாங்கு, விழுமியங்கள், தொழில்நுட்ப உள்கட்டமைப்பு, தொழிலாளர் சந்தை போன்ற பிரிவுகளில் சிங்கப்பூர் முதல்நிலையில் உள்ளது. அதே வேளையில், விலை, சுகாதாரம், சுற்றுச்சூழல், சமூகக் கட்டமைப்பு ஆகியவற்றில் சிங்கப்பூர் மேம்பாடு காண வேண்டும் என்பதை ஐஎம்டி அறிக்கை காட்டுகிறது.

மேலும், சிங்கப்பூர் உறுதியற்ற வெளிப்புறச் சூழல் ஏற்படுத்தியுள்ள சவால்களைக் கடக்க வேண்டும் என்றும், வாய்ப்புகளைக் கைப்பற்ற ஊழியர்களுக்கும் தொழில் நிறுவனங்களும் உதவ வேண்டும் என்றும், போட்டித்தன்மையைப் பேண புதிய தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தியுள்ள இடையூறுகளைச் சமாளிக்க வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டிற்கான தரவரிசையில் சிங்கப்பூர் நாலாமிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 2020ஆம் ஆண்டிற்குப் பிறகு அது முதல்நிலைக்கு முன்னேறியிருப்பதும் இதுவே முதன்முறை.

அண்டை நாடான மலேசியா உலக அளவில் ஏழு இடங்கள் கீழிறங்கி 34ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. பட்டியலில் இடம்பெற்றுள்ள 14 ஆசிய நாடுகளில் அது பத்தாம் நிலையிலுள்ளது.

தரவரிசைப் பட்டியலில் முதன்முறையாக இந்தோனீசியா, தாய்லாந்தைவிட மலேசியா பின்தங்கியிருப்பது கவனிக்கத்தக்கது.

அயர்லாந்து நாலாமிடத்தில் உள்ளது. ஹாங்காங் இரண்டு இடங்கள் முன்னேறி, ஐந்தாமிடத்தைப் பிடித்தது. சுவீடன் ஆறாமிடத்தைத் தக்கவைத்துக்கொண்டது.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் (யுஏஇ), தைவான், நெதர்லாந்து, நார்வே ஆகியவை முதல் பத்து இடங்களில் வந்துள்ள மற்ற நாடுகள்.

நைஜீரியா, கானா, புவெர்ட்டோ ஆகிய நாடுகள் முதன்முறையாகப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்
போட்டித்தன்மைசிங்கப்பூர்தரவரிசைமுதலிடம்