சிங்கப்பூர், நிச்சயமற்ற உலகச் சூழலில், ஒரே மாதிரியான சிந்தனையுடைய பங்காளிகளுடன் அணுக்கமாகப் பணியாற்றுவது அவசியம் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் கூறியிருக்கிறார்.
பொருளியலை விரிவுபடுத்தவும் விநியோக நடவடிக்கைகளைக் கட்டிக்காக்கவும் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட அனைத்துலக ஒழுங்கைப் பாதுகாக்கவும் அவ்வாறு செய்வது முக்கியம் என்றார் அவர்.
ஜெர்மனிப் பயணத்திற்கு முன்னர் துணைப் பிரதமர் கான் செய்தியாளர்களிடம் பேசினார்.
“ஜெர்மனியுடன் சிங்கப்பூர் இரு தரப்பு உறவை வலுப்படுத்த வேண்டும்; அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் ஆசியான் வட்டாரத்திற்கும் இடையில் பன்முகத் தொடர்புகளை ஊக்குவிக்க இரு தரப்பும் ஒத்துழைக்கலாம்,” என்றார் அவர்.
சிங்கப்பூர் அடுத்த ஆண்டு (2027), ஆசியான் அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்கும். அமைப்பு தொடங்கி அடுத்த ஆண்டுடன் 60ஆம் ஆண்டாகிவிடும்.
“பல தளங்களில் இரு தரப்பும் சேர்ந்து பணியாற்றலாம்,” என்று திரு கான் கூறினார்.
“சிங்கப்பூருக்கும் ஜெர்மனிக்கும் இடையில் புரிந்துணர்வையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது குறித்து அந்நாட்டின் அமைச்சர்களைச் சந்திக்க எண்ணியுள்ளேன். அவர்களுடன் ஐரோப்பிய ஒன்றியம், சிங்கப்பூர், ஆசியான் ஆகியவை தொடர்பான விவகாரங்கள் குறித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளேன்,” என்று அவர் சொன்னார்.
சிங்கப்பூரும் ஜெர்மனியும் உலக வர்த்தக நிறுவனத்தைச் சீரமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான் குறிப்பிட்டார்.

