சிங்கப்பூர் அரசாங்கம் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் காஸா அமைதிக்கான திட்டத்தை வரவேற்றுள்ளதாக வெளியுறவு அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதிபர் டிரம்ப்பின் அமைதித் திட்டத்திற்கான உடன்பாடுகளை ஹமாஸ் போராளிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சிங்கப்பூர் அரசாங்கம் கேட்டுக்கொண்டது.
“உடன்பாடுகளை ஏற்றுக்கொள்வதன்மூலம் காஸாவில் போர் நிறுத்தப்படும், பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். பாலஸ்தீன மக்களுக்கு மனிதநேய உதவிகள் வேகமாகக் கிடைக்கும்,” என்று அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
அதிபர் டிரம்ப், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கு இடையில் கலந்துரையாடல் நடத்தவும் முன்மொழிந்துள்ளார். அதையும் சிங்கப்பூர் வரவேற்றுள்ளது.
இஸ்ரேலும் பாலஸ்தீனமும் அமைதியாகச் சச்சரவு இல்லாமல் வாழ்வதற்கான அரசியல் ரீதியான கலந்துரையாடல் அது.
திங்கட்கிழமை (செப்டம்பர் 29) அதிபர் டிரம்ப்பும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவும் காஸா போர் நிறுத்த உடன்பாடு குறித்துப் பேசினர்.
இரு தலைவர்களும் இணக்கம் கண்ட அந்த 20 அம்சத் திட்டத்திற்கு அரபு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவளிக்கத் தொடங்கியுள்ளன.