2040க்குள் தென்கிழக்கு ஆசியாவில் ஆக அதிக மின்சார வாகனங்கள் சிங்கப்பூரில்தான்: புளூம்பெர்க் தகவல்

2040க்குள் தென்கிழக்கு ஆசியாவில் ஆக அதிக மின்சார வாகனங்கள் சிங்கப்பூரில்தான்: புளூம்பெர்க் தகவல்

2 mins read
ec724d81-4a58-48d7-b389-f8dcae879a0e
சிங்கப்பூர் லேண்ட் டவரில் மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டும் வசதிகள். - படம்: சிங்லேண்ட்

தென்கிழக்கு ஆசியாவிலேயே ஆக அதிகமான மின்சார வாகனங்களை 2040ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் கொண்டிருக்கும்.

இதை புளூம்பெர்க் நிறுவனத்தின் ஆய்வு அமைப்பான புளூம்பெர்க் என்இஎஃப் (BloombergNEF) தெரிவித்துள்ளது.

இந்த வட்டாரத்தின் மற்ற நாடுகளில் மொத்த பயணிகள் வாகன எண்ணிக்கையில் சராசரியாக 24 விழுக்காட்டு வாகனங்கள் மின்சார வாகனங்களாக இருக்கும் என்ற நிலையில் சிங்கப்பூரில் 2040ல் 80 விழுக்காட்டு மின்சார வாகனங்கள் இருக்கும் என்று புளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது.

சிங்கப்பூருக்கு அடுத்து இரண்டாம் நிலையில் இருக்கும் தாய்லாந்தில் 41 விழுக்காடு, வியட்னாமில் 31 விழுக்காடு, இந்தோனீசியாவில் 25 விழுக்காடு, மலேசியாவில் 15 விழுக்காடு, பிலிப்பீன்சில் 10 விழுக்காடு மின்சார வாகனங்கள் 2040ல் இருக்கும் என்றும் அந்த ஆய்வறிக்கை கணித்துள்ளது.

மின்சார வாகனங்களைக் கொண்டிருக்கும் மொத்தம் ஆறு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சிங்கப்பூர்தான் ஆக அதிகமாக மின்சார வாகனங்களை வாங்கும் நாடாக உள்ளது என்று புளூம்பெர்க் என்இஎஃப் கூறுகிறது. சிங்கப்பூரில் விற்பனையாகும் மொத்த வாகனங்களில் 19 விழுக்காட்டு வாகனங்கள் மின்சார வாகனங்கள் என்றும் அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

இதன் தொடர்பில், இவ்வாண்டின் முதல் ஏழு மாதங்களில் மட்டும் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் 32.1 விழுக்காட்டு வாகனங்கள் மின்சார வாகனங்கள் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் விளக்கியது.

மின்கலன்களின் விலை குறைவதுதான் மின்சார வாகனங்களை வாங்குவதற்கு அடிப்படை என்றும் புளூம்பெர்க் அறிக்கை தெரிவிக்கிறது.

இதில் மின்கலன்களுக்கான மூலப் பொருள்களின் விலையைப் பொறுத்து அதன் விலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றும் அறிக்கை கோடிகாட்டியது.

“மின்கலன்களின் விலை குறைந்தால் மின்சார வாகனங்களை வாங்கும் விலையும் குறையும்,” என்று கூறுகிறார் தெற்கு, தென்கிழக்கு ஆசிய பசுமைப் போக்குவரத்து குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள திருவாட்டி கரீர்.

புதைவள எண்ணெய் வாகனங்களுடன் விலையில் போட்டி போடக்கூடிய மின்சார வாகனங்கள் குறைவாக இருப்பதே மின்சார வாகனங்களை வாங்கும் போக்கு குறைவாக இருப்பதற்குக் காரணம் என்றும் திருவாட்டி கரீர் விளக்கமளித்தார்.

மின்கலன்களின் கட்டணம் ஆண்டுக்கு ஆண்டு 17 விழுக்காடுவரை குறையும் என்றும் புளூம்பெர்க் அறிக்கை கணித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்