மூப்படையும் மக்கள்தொகை, நோய்ப் பரவல், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட மனிதகுலம் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வுகாண நாடுகளுக்கு இடையில் யோசனைகள், வளங்கள், நிபுணத்துவத்தைப் பகிர்வது அவசியம் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார்.
உலகின் சிறந்த அறிவாளிகளை இணைத்து, இந்த இலக்குகளை எட்டுவதற்கான உலகளாவிய முயற்சிக்குப் பங்களிக்க சிங்கப்பூர் விரும்புகிறது என்றார் அவர்.
சீனத் தொழில்நுட்பத்துக்கான வருடாந்தர பெய்ஜிங் சோங்குவாங்கன் கருத்தரங்கில் மார்ச் 27ஆம் தேதி திரு ஹெங் உரையாற்றினார்.
சிங்கப்பூரில் 2012ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மேம்பட்ட ஆய்வு, தொழில்நுட்ப நிறுவன வளாகத்தை (CREATE) அவர் சுட்டினார். உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களை ஆய்வுக்காக ஒருங்கிணைக்கும் வளாகம் அது.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் தேசிய ஆய்வு அநிறுவனம் அதனை நிறுவியது.
கடந்த ஆண்டு அது, கரிம அகற்றத்துக்கான ஆய்வு ஒன்றைத் தொடங்கியது. சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருளியல் வளர்ச்சி தொடர்பில் ஆய்வு மேற்கொள்ள உலகின் தலைசிறந்த ஆய்வாளர்களை அந்த ஆய்வு ஒருங்கிணைத்துள்ளது.
அடுத்தபடியாக, உடல்நலத்துடன் வெற்றிகரமான நீண்ட ஆயுளை மேம்படுத்தும் ஆய்வுத் திட்டத்தில் அந்த ஆய்வு வளாகம் கவனம் செலுத்தும்.
நான்கு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள துணைப் பிரதமர் ஹெங், இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் சீனாவின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிவருகிறார். வியாழக்கிழமையுடன் (மார்ச் 27) அவரது பயணம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.