பருவநிலை தொடர்பில் வளரும் நாடுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள, சிங்கப்பூர் வளங்களை வழங்கக் கட்டாயமில்லை என்றாலும் அது தானாக முன்வந்து உதவும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.
வளரும் நாடுகளுக்கு நிதியளிப்பது தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை சிங்கப்பூர் ஆதரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பருவநிலை நிதியளிப்புக்கு உதவும் கட்டாயம் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு உண்டு என்று இந்தப் பலதரப்பு உடன்படிக்கையில் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஃபூ தெரிவித்தார்.
இருப்பினும், அனைத்துலக பேச்சுவார்த்தை அடிப்படையில் வளரும் நாடாக சிங்கப்பூர் வகைப்படுத்தப்பட்டுள்ளதால் பாரிஸ் ஒப்பந்தப்படி, வளரும் நாடுகளுக்கு நிதி வளங்கள் வழங்கும் கட்டாயம் சிங்கப்பூருக்கு இல்லை.
இதற்கிடையே, சிங்கப்பூர் போன்ற தரப்புகள் தாமாக முன்வந்து அனைத்துலக பருவநிலை நிதிக்கு உதவி வழங்க ஊக்குவிக்கப்படுகின்றன. அதையே சிங்கப்பூரும் சில வழிகளில் செய்து வருகிறது என்றார் திருவாட்டி ஃபூ.
வருடாந்திர நிகழ்வான ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பருவநிலை மாநாடு, நவம்பர் 11ஆம் தேதி அஸர்பைஜானில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மிக முக்கியமானதொரு அனைத்துலக பருவநிலை நிதி இலக்கை எட்டுவது குறித்து சிங்கப்பூரின் நிலைப்பாட்டை அமைச்சர் ஃபூ எடுத்துக் கூறினார்.
வளர்ச்சியடைந்த நாடுகள் ஆண்டுக்கு $100 பில்லியன் அமெரிக்க டாலரை (S$131.5 பி.) வளரும் நாடுகளுக்கு வழங்கக் கடப்பாடு கொள்வதே இந்த இலக்காகும். 2009ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக இது இருக்கும். இருப்பினும், 2020ஆம் ஆண்டுக்குள் எட்ட வேண்டிய முந்தைய ஒப்பந்த இலக்கை, 2022ஆம் ஆண்டில்தான் அடைய முடிந்தது.

