சிங்கப்பூரில் இவ்வாண்டின் முற்பாதியில் வேலையிடப் படுகாய விகிதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆகக் குறைவாகப் பதிவாகியுள்ளது. இணையவழி ஊழியர்கள் நீங்கலாக, 100,000 ஊழியர்களுக்கு 14.6 என்ற விகிதத்தில் அது பதிவானது.
மனிதவள அமைச்சு வெளியிட்டுள்ள 2026 முற்பாதிக்கான வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார அறிக்கையில் இத்தகவல்கள் அதிகாரபூர்வமாக செவ்வாய்கிழமை (செப்டம்பர் 8) வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த விகிதம் 15.8 ஆகப் பதிவாகியிருந்த நிலையில் பெரிய கட்டுமானத் திட்டங்களில் ஏற்பட்ட சிறப்பான பாதுகாப்பு மேம்பாடுகளே இச்சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தன.
அறிக்கையின்படி, இணையவழி ஊழியர்கள் அல்லாத பிற ஊழியர்களிடையே ஏற்பட்ட படுகாயச் சம்பவங்களின் எண்ணிக்கை 274 ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 293ஆகப் பதிவானது.
இணையவழி ஊழியர்களின் தரவுகளையும் உள்ளடக்கிப் பார்க்கும்போது, ஒட்டுமொத்தப் படுகாய விகிதம் 100,000 ஊழியர்களுக்கு 16.7 (314 சம்பவங்கள்) ஆகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் 18.1 விகிதத்தைவிடக் குறைவானது.
எனினும், வேலையிட மரணங்களின் எண்ணிக்கை இவ்வாண்டின் முற்பாதியில் சற்றே உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 21 ஊழியர்கள் இக்காலகட்டத்தில் வேலையிட விபத்துகளால் உயிரிழந்தனர். இதனால் ஆண்டு முழுவதற்குமான மரண விகிதம் 1.1 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 18 மரணங்கள் (விகிதம் 0.97) பதிவாகியிருந்தன.
உயிரிழந்த 21 பேரில் 9 பேர் வாகன விபத்துகளாலும், 5 பேர் மூச்சுத்திணறல் அல்லது நீரில் மூழ்கியதாலும் மாண்டனர். இணையவழி ஊழியர்களின் மரணங்களைத் தவிர்த்துப் பார்த்தால், நாட்டின் மரண விகிதம் 100,000 ஊழியர்க்கு 0.90 (17 மரணங்கள்) என்ற அளவில் சீராக உள்ளது.
கட்டுமானத் துறையின் ஒட்டுமொத்தப் படுகாய, மரண விகிதம் 24.1 ஆகக் குறைந்து, 2020ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.
பெரிய கட்டுமானத் தளங்களில் படுகாயச் சம்பவங்கள் 27 விழுக்காடு சரிந்துள்ளன (26லிருந்து 19 ஆகக் குறைவு). மாறாக, வீடுகளின் மறுசீரமைப்பு (renovation), கூடுதல் கட்டுமானப் பணிகள் (Additions & Alterations) போன்ற சிறிய பணிகளில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 46லிருந்து 48 ஆக உயர்ந்துள்ளது.
கட்டுமானத் துறையின் ஒட்டுமொத்தப் படுகாயங்களில் 70 விழுக்காடு இத்தகைய சிறிய அளவிலான பணிகளிலேயே நேரிட்டுள்ளன.
உற்பத்தித் துறையின் படுகாய விகிதம் 28.4 ஆகச் சீராக நீடிக்கிறது. ஆயினும், உலோக வேலைப்பாட்டுப் பிரிவில் (Metalworking) படுகாயங்களின் எண்ணிக்கை 18லிருந்து 28ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில், உணவு, பானங்கள் தயாரிப்புத் துறையில் காயங்கள் 22லிருந்து 15 ஆகக் குறைந்துள்ளன. உலோக வேலைப்பாட்டுத் துறையில் இயந்திரப் பாதுகாப்பு விதிமுறைகளை வலுப்படுத்த அதிகாரிகள் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இவ்வாண்டின் முற்பாதியில் சிங்கப்பூரில் தொழில்சார் நோய்களின் (Occupational Diseases) எண்ணிக்கை 620ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இத்தகைய நோய்களின் எண்ணிக்கை 485 ஆக மட்டுமே பதிவாகியிருந்தது. இதில் இரைச்சலால் ஏற்படும் செவித்திறன் இழப்பு (Noise-Induced Hearing Loss) 57 விழுக்காட்டுடன் முதலிடத்திலும், தசைநார்க் கோளாறுகள் (Work-related Musculoskeletal Disorders) 23 விழுக்காட்டுடன் இரண்டாமிடத்திலும், தொழில்சார் தோல் நோய்கள் 11 விழுக்காட்டுடன் மூன்றாமிடத்திலும் உள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த புதிய பாதுகாப்புச் சட்ட விரிவாக்கத்தின்கீழ் தசைநார்க் கோளாறுகளுக்கான சட்ட வரம்புகள் உடலின் பிற பாகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டதே இந்த எண்ணிக்கையின் உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.
அதோடு, அமைச்சின் தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக மருத்துவர்களும் நிறுவனங்களும் இத்தகைய நோய்களைக் கண்டறிந்து தெரிவிக்கும் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. எனவே, இந்த எண்ணிக்கை உயர்வு பணியிடச் சுகாதாரச் சீரழிவைக் காட்டவில்லை என்றும், மேம்பட்ட கண்காணிப்பையே பிரதிபலிக்கிறது என்றும் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
மே, ஜூன் மாதங்களில் நான்கு வாரங்களுக்குள் ஏழு ஊழியர்கள் உயிரிழந்ததை அடுத்து, மனிதவள அமைச்சு ஜூன் மாதத்தில் தேசிய அளவில் இரண்டு வாரப் பாதுகாப்பு மேம்பாட்டுக்கான தற்காலிக வேலை நிறுத்த நடவடிக்கைக்கு (Safety Time-out) அழைப்பு விடுத்தது.
அத்துடன், விதிமீறல்களுக்கான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டதோடு, பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வேலைநிறுத்த உத்தரவின் கால அளவும் நீட்டிக்கப்பட்டது.
“படுகாயச் சம்பவங்கள் கணிசமாகக் குறைந்திருப்பது முதலாளிகள், ஊழியர்கள், பாதுகாப்பு நிபுணர்கள் ஆகியோரின் கூட்டு உழைப்பைக் காட்டுகிறது.
“எனினும், வாகன விபத்துகள் போன்ற மரண விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது. இதைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு மேம்பாட்டுக்கான தற்காலிக வேலை நிறுத்த நடவடிக்கை போன்ற உடனடிச் செயல்முறைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்,” என்றார் மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ்.
ஒட்டுமொத்த வேலையிடப் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் மேம்படுத்த முதலாளிகளும் ஊழியர்களும் தொடர்ந்து விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிறிய பணிகளுக்கான ஒப்பந்ததாரர்களைக் கண்காணிக்க புதிய விதிகளை அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
அதோடு, 20 ஆண்டுகள் பழைமையான ‘பிஸ்சேஃப்’ (bizSAFE) திட்டத்தை அமைச்சு முழுமையாக மறுஆய்வு செய்து வருகிறது. நிறுவனங்கள் காகித அளவிலான பயிற்சிகளோடு நின்றுவிடாமல், அவர்களின் உண்மையான வேலையிடப் பாதுகாப்புச் செயல்முறைகளுடன் இச்சான்றிதழை இணைப்பதே இதன் நோக்கம் ஆகும். இதன்மூலம், பாதுகாப்பான ஒப்பந்ததாரர்களை நிறுவனங்கள் எளிதாகத் தேர்ந்தெடுக்க முடியும்.


