தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் பன்முகக் கலாசாரத்தை இளையர்கள் வலுப்படுத்த வேண்டும்: டேவிட் நியோ

2 mins read
3c4ff47b-aced-4ec9-9aaf-8b196c9b0546
இன, சமய நல்லிணக்க வட்டத்தின் (ஹார்மனி சர்க்கிள்) பல்லின கலாசார படைப்பு நிகழ்ச்சியில்  கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ. உரையாற்றினார்.  - படம்: சாவ்பாவ் 

சிங்கப்பூரர்களாகிய நமது அடிப்படை விழுமியங்களில் நமது பன்முகக் கலாசாரம் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும் என்று கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ வலியுறுத்தியுள்ளார்.

பல தலைமுறைகளாகப் பேணப்படும் விலைமதிப்பற்ற சொத்து நமது பன்முகத்தன்மை என்றார் அவர்.

சிங்கப்பூர் சீனக் கலாசார மையத்தில் ஜூலை 27ஆம் தேதி நடைபெற்ற இன, சமய நல்லிணக்க வட்டத்தின் (ஹார்மனி சர்க்கிள்) பல்லின கலாசார படைப்பு நிகழ்ச்சியில் திரு நியோ உரையாற்றினார்.

‘கலைடோஸ்கோப்: இயக்கத்தில் இணக்கம்’ என்ற இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க இளையர்கள் தலைமைத்துவத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

“நமது பன்முகக் கலாசாரத்தை இளைய தலைமுறையினர் போற்றி, வலுப்படுத்தி, அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டும்,” என்றார் அவர்.

இன, சமய நல்லிணக்க மாதத்தைத் தொடர்ந்து ‘எஸ்ஜி60’ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்தப் பல்லினக் கலாசார படைப்பு நிகழ்ச்சி இடம்பெற்றது.

கிட்டத்தட்ட 10 சமயங்களையும் 25 சமூக அமைப்புகளையும் சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட இளையர்கள் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.

இதில் ஏறத்தாழ 500 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆண்டு அனைத்து நல்லிணக்க வட்டங்களும் சமூகப் பங்குதாரர்களும் 60க்கும் மேற்பட்ட நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தனர். இவற்றில் 100,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இது 2022ஆம் ஆண்டை விட இரு மடங்கு அதிகம் என்றும் திரு நியோ குறிப்பிட்டார்.

“வெவ்வேறு அமைப்புகளை ஒன்றிணைத்து ஒருவருக்கொருவர் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்று காட்டுவது கலைடோஸ்கோப்பின் குறிக்கோள்,” என்றார் சொங் பாங் நல்லிணக்க வட்டத்தின் உறுப்பினரும் நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பேற்பவருமான ஹேமரூபன், 31.

தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் அவர், வகுப்பறைகளில் இன, சமய நல்லிணக்கத்தை ஆதரிப்பதில் ஓர் ஆசிரியரின் பங்கு மாறியுள்ளது என்றார்.

“இன்றைய இளையர்கள் பல தகவல்களை நன்கு அறிந்தவர்கள். சிங்கப்பூரின் இன, சமய நல்லிணக்கத்தை அவர்கள் புரிந்துகொள்ள இந்தத் தகவல்களைக் கொண்டு அர்த்தமுள்ள கலந்துரையாடல்களை வழிநடத்துவது நமது பொறுப்பு,” என்றார்.

இந்திய முஸ்லிம் சமூக சேவைச் சங்கத்தின்வழி பல்லின, சமயக் கலந்துரையாடல்கள் பலவற்றை வழிநடத்தியுள்ள துணைத் தலைவர் இர்ஃபானா பேகம், இளையர்கள் தங்கள் வெவ்வேறு கலாசாரங்களை ஆழமாகப் புரிந்துகொள்வது எவ்வளவு முக்கியம் என்று எடுத்துரைத்தார்.

“தனிப்பட்ட அடையாளத்தைப் பற்றிய புரிதல் எவ்வளவு அவசியமோ அவ்வளவு மற்றவர்களின் அடையாளங்கள் பற்றிய புரிதல் அதிகரிப்பதும் அவசியம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்