தொண்டு நோக்கத்திற்காக நிதி திரட்ட சிங்கப்பூரருக்குத் தடை

2 mins read
4d53228a-d559-45a4-8b40-1a4e15441d05
பில்பி சமூக மேம்பாடு என்ற இளையர் அறநிறுவனத்திற்காக 2023ஆம் ஆண்டு மே மாதம் முதல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம்வரை வர்த்தக நிதி திரட்டில் ‘டைரக்ட் ஹோப்’ ஈடுபட்டிருந்தது.  - படம்: பிக்சாபே

நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட 26 வயது சிங்கப்பூரரான யூஜின் லியாவ் சியா ஹாவுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலாசார, சமூக, இளையர் அமைச்சும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் இணைந்து செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) வெளியிட்ட கூட்டறிக்கையில், அறநிறுவனப் பெயரில் நிதி திரட்டில் ஈடுபட பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பலவற்றைத் திரு லியாவ் மீறியதாகத் தெரிவித்தது.

இதனால், ஜூன் 10ஆம் தேதி முதல் தொண்டு, மனித நேய நடவடிக்கைகள் ஆகியவற்றிற்காக நிதி திரட்ட அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அது சொன்னது.

இதற்கான தடை உத்தரவை அறநிறுவன ஆணையர் அரசிதழில் ஜூன் 9ஆம் தேதி வெளியிட்டார்.

திரு லியாவ்வின் நிறுவனமான ‘டைரக்ட் ஹோப்’ மேற்கொண்ட நிதி திரட்டு நடவடிக்கைகள் குறித்து 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் சில கருத்துகள் அறநிறுவன ஆணையத்திற்கு வந்தன.

பில்பி சமூக மேம்பாடு என்ற இளையர் அறநிறுவனத்திற்காக 2023ஆம் ஆண்டு மே மாதம் முதல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம்வரை வர்த்தக நிதி திரட்டில் ‘டைரக்ட் ஹோப்’ ஈடுபட்டிருந்தது.

அறநிறுவன ஆணையத்திற்குக் கிடைத்த கருத்துகளின் அடிப்படையில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு விசாரணை நடத்தியது.

அதில், அறநிறுவனத்தின் பெயரில் நிதி திரட்டில் ஈடுட அறநிறுவன (உள்ளூர், வெளிநாட்டில் தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கங்களுக்காக) விதிகள் 2012ன் கீழுள்ள பல விதிமுறைகளைத் திரு லியாவ் மீறியது கண்டறியப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்