குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த 55 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த சிங்கப்பூரர்கள் ஏறக்குறைய 850,000 பேர், அடுத்த மாதம் (2025 பிப்ரவரி), $200 முதல் $300 வரையிலான ரொக்க வழங்கீடுகளைப் பெறுவார்கள்.
உத்தரவாதத் தொகுப்புத்திட்டத்தின் மூத்தோருக்கான போனஸ் திட்டத்தின்கீழ் இந்தத் தொகை வழங்கப்படவிருக்கிறது. சிங்கப்பூரில் வசிக்கும் மூத்தோரில் ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துகள் இல்லாதோர் இதற்குத் தகுதி பெறுவர்.
பிப்ரவரி 5 முதல் அவர்கள் இந்த ரொக்க வழங்குதொகையைப் பெறுவர்.
மேலும், சிங்கப்பூரர்களில் 20 அல்லது அதற்குக் குறைவான வயதுடையோரும், 55 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோரும் தங்கள் மத்திய சேமநிதிக் கணக்குகளில் $150 ‘மெடிசேவ்’ நிரப்புதொகையைப் பெறுவார்கள்.
இதன்கீழ் சிங்கப்பூரில் வசிக்கும் ஏறத்தாழ இரண்டு மில்லியன் குடிமக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்துகளின் ஆண்டு மதிப்பு அல்லது மதிப்பிடக்கூடிய வருமானம் இந்த நிரப்புதொகையைப் பாதிக்காது என்று நிதி அமைச்சு ஜனவரி 15ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. பிப்ரவரி 11ஆம் தேதியிலிருந்து அவர்களின் மத்திய சேமநிதிக் கணக்குகளில் இந்தத் தொகை நிரப்பப்படும்.
சிங்கப்பூர்க் குடும்பங்களின் வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்கவும் குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கவும் உத்தரவாதத் தொகுப்புத்திட்டத்திற்கு மேலும் $1.9 பில்லியன் ஒதுக்கப்படும் என்று 2024ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
மூத்தோருக்கான ரொக்க வழங்கீட்டைப் பெறுபவர்களில் 62 வயது தேவானந்தம் துரைசாமியும் ஒருவர். 36 ஆண்டுகள் சிறைச்சாலை அதிகாரியாகப் பணிபுரிந்து தற்போது ஓய்வுபெற்றுள்ள அவர் அடுத்த மாதம் $250 ரொக்க வழங்கீட்டுடன் $150 ‘மெடிசேவ்’ நிரப்புதொகையைப் பெறவிருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்த நிதியுதவி என் மருத்துவச் செலவுகளுக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும். அது மட்டுமின்றி ஓய்வு பெற்ற எனக்கு வீட்டுச் செலவுகளைச் சரிவர கவனிக்கவும் உதவும்,” என்றார் அவர்.
தகுதி பெறும் மூத்தோர் மூன்று ஆண்டுக் காலகட்டத்தில் மொத்தம் $600 முதல் $900 வரையிலான ரொக்க வழங்கீட்டைப் பெறுவார்கள்.
20 அல்லது அதற்குக் குறைவான வயதுடைய, மற்றும் 55 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்கள் அனைவரும் மூன்று ஆண்டுகளில் மொத்தம் $450 ‘மெடிசேவ்’ நிரப்புதொகையைப் பெறுவர்.
இந்தச் சலுகைகள் முதன்முதலில் 2022ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டன. 2023ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் ரொக்க வழங்கீடுகள் அளிக்கப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்தது.
தகுதி பெறுவோருக்கு ரொக்க வழங்கீடுகள் அளிக்கப்பட்டது குறித்து பிப்ரவரி மாதம் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். குறுஞ்செய்தி பெறாதவர்களுக்கு அவர்களின் அடையாள அட்டையில் பதிவு செய்யப்பட்ட முகவரிக்குக் கடிதம் அனுப்பப்படும்.
16 அல்லது அதற்குக் குறைவான வயதுடைய ‘மெடிசேவ்’ நிரப்புதொகைப் பெறுநர்களுக்குப் பெற்றோர் அல்லது பாதுகாவலர் முகவரிக்குக் கடிதம் அனுப்பப்படும்.
மேல்விவரங்களுக்கு govbenefits.gov.sg இணையத்தளத்தை நாடலாம்.

