விமானச் சேவைகள் செயல்பட்டுக்கொண்டிருக்கும்போதே ஈரானிலிருந்து புறப்படுமாறு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு, ஈரானில் இருக்கும் சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அங்கு வட்டார அளவில் பதற்றநிலை மோசமடைந்துள்ளதாலும் அண்மையில் அந்நாட்டில் வெடித்துள்ள ஆர்ப்பாட்டங்கள் காரணமாகவும் இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக 3,000 பேருக்கும் மேலானோரைப் பலிவாங்கிய ஆர்ப்பாட்டங்கள் வெடித்தபோது ஈரானுக்குப் போவதைத் தள்ளிப்போடுமாறு வெளியுறவு அமைச்சு, கடந்த ஜனவரி மாதம் சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டது.
அதைக் கருத்தில்கொண்டே இன்னமும் செயல்படுமாறு புதன்கிழமை (பிப்ரவரி 25) வெளியிட்ட அறிவுரைக் குறிப்பில் (advisory) அமைச்சு சொன்னது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஈரான் மீது அமெரிக்கா நடத்தக்கூடிய தாக்குதலுக்கான திட்டத்தை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) தமது நாடாளுமன்ற உரையில் முன்வைத்தார். பயங்கரவாதத்துக்கு ஆக அதிக நிதி ஆதரவு வழங்கும் நாடு அணுவாயுதங்களை வைத்துக்கொள்ளத் தாம் அனுமதிக்கப்போவதில்லை என்று திரு டிரம்ப் குற்றஞ்சாட்டிப் பேசினார்.
“தற்போது ஈரானில் இருக்கும் சிங்கப்பூரர்கள், விழிப்புடன் நிலைமையை உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும், விமானச் சேவைகள் செயல்பாட்டில் இருக்கும்போதே கூடுமானவரை விரைவில் அங்கிருந்து கிளம்பவேண்டும். ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் இடங்கள், அதிக கூட்டம் கூடும் பகுதிகள் ஆகியவற்றுக்குப் போவதைத் தவிர்க்கவும் வேண்டும்,” என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

