60 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூரர்கள் அக்டோபர் 23 முதல் முகக்கவசம் பெறலாம்: கிரேஸ் ஃபூ

60 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூரர்கள் அக்டோபர் 23 முதல் முகக்கவசம் பெறலாம்: கிரேஸ் ஃபூ

படம்: பெரித்தா ஹரியான்

22 Oct 2026 - 6:11 pm

2 mins read

புகைமூட்ட அபாயத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள அரசாங்கம் இரண்டாவது தவணையாக விநியோகிக்கும் முகக்கவசத்தைத் தகுதியுள்ள சிங்கப்பூரர்கள் அக்டோபர் 23 முதல் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த முறை சமூக மன்றங்கள், முகக்கவச விநியோகத்திற்கான தானியங்கி இயந்திரங்கள் மற்றும் பிற இடங்களில் இருந்து அவற்றைப் பெறலாம்.

அதற்குத் தகுதியுடைய சிங்கப்பூரர்களின் பட்டியல் விரிவாக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட முகக்கவச விநியோகம் தொடர்பாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ வியாழக்கிழமை (அக்டோபர் 22) விவரித்தார்.

தற்போது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் இரண்டு முகக்கவசங்கள் கொண்ட தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம் என்றார் அவர். இதற்கு முன்பு, 67 வயதை எட்டியவர்கள் மட்டுமே அதற்குத் தகுதியுடையவர்களாகக் கருதப்பட்டனர்.

“பொதுமக்களின் கருத்துகளைக் கருத்தில்கொண்டுள்ளோம். மெர்டேக்கா தலைமுறை அல்லது முன்னோடித் தலைமுறையினராக இல்லாத, ஆனால் 60 வயதைக் கடந்த சில மூத்தோர், தங்களுக்கும் அந்த முகக்கவசங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்,” என்றார் திருவாட்டி ஃபூ.

முன்னோடித் தலைமுறை மூத்தோர் எனப்படுபவர்கள் 1949ஆம் ஆண்டு அல்லது அதற்குமுன் பிறந்த சிங்கப்பூரர்கள் ஆவர். அதே வேளை, மெர்டேக்கா தலைமுறை என்பது 1950களில் சிங்கப்பூரில் பிறந்த குடிமக்களைக் குறிக்கிறது.

இரண்டாவது முகக்கவச விநியோக முறையில் முகக்கவசங்களைப் பெற தகுதியுடையவர்கள்: 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்தோர், நீல நிற மற்றும் ஆரஞ்சு நிற ‘சாஸ்’ அட்டை வைத்திருப்போர், மருத்துவக் கட்டண விலக்கு அட்டைதாரர்கள், காம்கேர் உதவி பெறுபவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், ஏழு முதல் 16 வயது வரை உள்ள சிறார், ஆஸ்துமா போன்ற மருத்துவப் பிரச்சினைகள் உள்ளவர்கள்.

மக்கள் கழகத்தின் சமூக மன்றங்கள்மூலம் முகக்கவசங்கள் விநியோகிக்கப்படும்.

மேலும், 37 பொதுப் போக்குவரத்து மையங்கள், சமூக சேவை அலுவலகங்கள், மக்கள் கழக இடங்கள் ஆகியவற்றில் உள்ள தானியங்கி இயந்திரங்கள் மூலமாகவும் முகக்கவசங்களைப் பெறலாம்.

முகக்கவசங்கள் கிடைக்கும் இடங்களை go.gov.sg/hazemask என்ற இணையப்பக்கம் வழியாகத் தெரிந்துகொள்ளலாம்.

முகக்கவச விநியோகம் அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கியது. அன்றைய நாள் சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் பிஎம்2.5 குறியீடு அதிகரித்து மாலை 3 மணியளவில் உச்சபட்ச அளவான 288ஐ எட்டியது.

பிஎம்2.5 என்பது 2.5 மைக்ரோமீட்டர் அல்லது அதற்குக் குறைவான விட்டம் கொண்ட நுண்துகள்களைக் குறிக்கிறது.

எல்லைதாண்டிய புகைமூட்டத்தின்போது இந்தத் துகள்களே அதிகம் மாசுபடுத்தக்கூடியவை. இது நுரையீரலுக்குள்ளும் ரத்தத்தினுள்ளும் ஆழமாகச் செல்லும் அளவுக்கு ஆகச் சிறிய துகள்கள்.

குறிப்புச் சொற்கள்